உறுதியாக பிரார்த்தனை செய்வோம்
அல்லாஹ் தனது அடியான் தன்னிடத்தில் துஆ கேட்பதை விரும்புகின்றான். இது அல்லாஹ்விடம் நம்மை நெருக்கமாக்குகின்றது. ஏகத்துவத்தை நிரூபிக்கின்றது. இதில் உண்மையான ஆத்மார்த்தமான உரையாடல் உள்ளது. இதன் மூலம் துன்பங்கள் நீங்குகின்றன, தேவைகள் நிறைவேறுகின்றன, தீமைகள் தடுக்கப்படுகின்றன, மேலும் பரகத்துகள் கிடைக்கின்றன. இதன் மூலம் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன, மேலும் இது நரக நெருப்பிலிருந்தும் வேதனையிலிருந்தும் ஒருவரைப் பாதுகாக்கிறது.
அல்லாஹ் எத்தகைய பிரார்த்தனையை விரும்புகிறான்?
அல்லாஹ் பிரார்த்தனையை ரகசியமாகச் செய்வதையே விரும்புகிறான். மேலும், அல்லாஹ் பிரார்த்தனையில் உறுதியாக வற்புறுத்திக் கேட்பதை விரும்புகிறான். சலிப்போ, களைப்போ அல்லது ஏமாற்றமோ அடையாமல் தொடர்ந்து அல்லாஹ்விடத்தில் அதிகமாகக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுவதன் ரகசியம் என்ன?
அல்லாஹ் சூரத்துல் அன்பியாவில், நபிமார்களின் பிரார்த்தனைகளைக் குறிப்பிட்ட பிறகு ஒரு முக்கிய விஷயத்தைக் கூறுகிறான். “அவர்கள் நற்செயல்களில் விரைந்து ஈடுபடுபவர்களாக இருந்தார்கள். மேலும் அவர்கள் (நம்மிடம்) ஆர்வத்தோடும், அச்சத்தோடும் பிரார்த்தனை செய்தார்கள். இன்னும் அவர்கள் நமக்கே அஞ்சி நடப்பவர்களாக இருந்தார்கள்.”
எனவே, நாம் எமது துஆக்களை அல்லாஹ் விரும்புவது போன்று அமைத்துக் கொள்வோம். அவை அங்கீகரிக்கப்படுவதற்கான பண்புகளை நம்மில் வளர்த்துக் கொள்வோம்.
சூரதுல் ஃபாதிஹாவின் மகத்துவம்
சூரதுல் ஃபாதிஹா என்பது திருமறையின் தோற்றுவாய், அது உம்முல் குர்ஆன் (குர்ஆனின் தாய்), அஸ்-ஸப்உல் மஸானி (மீண்டும் மீண்டும் ஓதப்படும் ஏழு வசனங்கள்), முழுமையான நிவாரணம், பயனளிக்கும் மருந்து, முழுமையான ருக்யா, செழிப்புக்கும் வெற்றிக்குமான திறவுகோல், மேலும் அதன் மகத்துவத்தை அறிந்து அதற்குரிய உரிமையை வழங்குபவருக்கு வலிமையைப் பாதுகாக்கும், கவலை, துயரம், பயம் மற்றும் சோகத்தை நீக்கும் அருட்கொடை ஆகும். (இமாம் இப்னுல் கையிம் ரஹ்).
நமது செயல்களுக்கு நாமே பொறுப்பு
(فَكُلًّا أَخَذْنَا بِذَنبِهِ) – “அவரவர் செய்த பாவத்திற்காகவே நாம் ஒவ்வொருவரையும் பிடித்தோம்” (அன்கபூத் 40).
எனவே, ஒவ்வொரு பாவியும் தாம் செய்த பாவத்திற்கேற்ப அல்லாஹ்வினால் கணக்குக் கேட்கப்படுவார். அவருக்கேற்ற தண்டனையும் வழங்கப்படும். அவர் மற்றொருவரின் பாவத்திற்காகத் தண்டிக்கப்படமாட்டார்.
ஆகையால்இ பிறரின் குறைகளை ஆராய்வதைவிட, உங்களுடைய குறைகளைச் சீர்செய்வதில் கவனம் செலுத்துங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.
யா அல்லாஹ்! உன்னைத் திருப்திப்படுத்தும் செயல்களைச் செய்ய எங்களுக்கு அருள் புரிவாயாக. எங்களை அழகிய முறையில் உன்னிடமே மீளச் செய்வாயாக.
ஸதகா
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவனுடைய நற்செயல்கள் அனைத்தும் நின்றுவிடும். மூன்றைத் தவிர: தொடர்ந்து பயனளிக்கும் தர்மம், பயனளிக்கும் கல்வி, மற்றும் அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை ஆகியவை.”





