ஸலாமா வாராந்த நினைவூட்டல் 06

May 21, 2026
25 Views

புனித கஃபாவின் மகிமை

மக்கத்து மண்ணில் அமைந்துள்ள புனித கஃபா உலகில் நிர்மாணிக்கப் பட்ட முதலாவது இல்லம். நபிமார்கள் வாழ்ந்த பூமி. அல்லாஹ்வின் வழிகாட்டல்கள் வஹி மூலமாக இறங்கிய சங்கையான இடம். புனித கஃபா நபி இப்ராஹீம் (அலை) அவர்களது குடும்பத்தின் ஆதரவுடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. இதனால் தான் ஹஜ் காலத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களது குடும்பத்தின் அர்ப்பணம் விஷேடமாக நினைவுபடுத்தப்படுகின்றது.
முழு உலகிலும் அனைத்து நேரமும் உயிர்ப்பிக்கப்படும் ஒரே ஒரு இடம் கஃபா மாத்திரமே. General Authority for Statistics வெளியிட்ட புள்ளி விபரங்களின் படி, ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 278,000 பேர் தொழுகையில் ஈடுபடுகின்றனர். 107,000 பேர் கஃபாவை வலம் வருகின்றனர்.
ஒரே நேரத்தில் சுமார் 3.5 மில்லியன் பேர் தொழும் இடவசதி கொண்ட மாபெரும் மஸ்ஜிதாக மஸ்ஜிதுல் ஹராம் காணப்படுகின்றது.

வற்றாத அற்புதமான கிணறு

ஸம்ஸம் நீர் என்பது பூமியின் மேற்பரப்பில் உள்ள மிகப் பழமையான, தூய்மையான மற்றும் பரிசுத்தமான நீராகக் கருதப்படும் ஒரு அற்புதமாகும். இது அல்லாஹ் நபி இஸ்மாஈல் (அலை) அவர்களுக்கும் அவர்களின் தாய் ஹாஜர் அவர்களுக்கும் வழங்கிய ஒரு விஷேடமான கருணையாகும். ஆன்மீக விமோசனத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பொதிந்த விஷேட பண்பு ஸம்ஸம் நீருக்கே உள்ளது. கஃபாவில் இருந்து 21 மீட்டருக்கு அப்பால் இந்நீரூற்று காணப்படுகின்றது. 30 மீட்டர் ஆழமுடைய ஸம்ஸம் கிணற்றின் ஊற்றுக்கள் ஒரு வினாடிக்கு 11 முதல் 18.5 லிட்டர் வரை தண்ணீரை வெளியேற்றுகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.

ஸம்ஸம் நீர் தூய்மையானது, தெளிவானது, பரிசுத்தமானது. இதற்கு நிறமோ மணமோ இல்லை. இதில் எந்தவித கிருமிகளும் இல்லை என்பது, இதன் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், இரசாயனப் பரிசோதனைகள் மற்றும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் மூலம் செய்யப்பட்ட சோதனைகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மகத்துவம் நிறைந்த அரபா தினம்

துல்ஹிஜ்ஜா பிறை 9 உலக நாட்களிலே மிகச் சிறந்த நாளாகும். இதுதான் அரபா நாள். குறிப்பாக அல்லாஹ், இந்நன்னாளை பிரார்த்தனைக்குரிய நாளாகவே ஒதுக்கியிருக்கின்றான். அரபா மைதானத்தில் தரிப்போரின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்கின்றான். ஹஜ்ஜுக்கு செல்லாமல் இத்தினத்தில் நோன்பு நோற்பவரின் இரு வருட பாவங்களை அல்லாஹ் மன்னிக்கின்றான். அல்லாஹ் எவ்வளவு அன்பாளன். கருணையுள்ளவன்.
அதிகமான நரகவாசிகளை அல்லாஹ் விடுதலை செய்யும் நாளாக அரபா தினம் உள்ளது.
இத்தினத்திலேயே அல்லாஹ் இஸ்லாம் மார்க்கத்தை முழுமைப்படுத்தினான்.

Leave A Comment