முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்மாதிரியான முதன்மை ஆசிரியர் – பகுதி 7

March 29, 2023
905 Views

– எம். எச். எம். நாளிர் –

பகுதி – 

  1. மாணவனை இனங்காணல்

இன்றைய ஆசிரியர்களில் பெரும்பாலோரைப் போன்று, நபி (ஸல்) அவர்கள் பாடத்தை குறியாக வைத்துச் சுழல்பவராக மட்டும் அமையாமல் கற்போர் சிந்திக்க வேண்டும்; கற்பதற்கான தயார் நிலையில் இருக்க வேண்டும்; சிறந்த மனிதராக உயர வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார்கள். அவர்கள் மாணவரைச் சுற்றிச் சுழல்பவராகவே நடந்து கொண்டார்கள். ஆதலால் அவர்கள் சுற்றியிருந்த அத்தனைத் தோழர்களையும் புரிந்து கொண்டார்கள்; இனம் கண்டார்கள். தனித்தனியாக பெயர்களையும் அறிந்து வைத்திருந்தார்கள். பாராட்டத்தக்க செல்லப்பெயர்களையும் வைத்திருந்தார்கள். இது, எவர் எத்துறைக்குப் பொருத்தமானவர் என்பதை விளங்கிக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது. எனவே தான், சந்தர்ப்ப சூழ்நிலைகளில்  அவர்களை சமூகத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.

இதற்கான சில உதாரணங்களைப் பார்ப்போம். ‘நால்வரிடமிருந்து அல்குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள். அவர்கள், இப்னு மஸ்ஊத் (ரழி), முஆத் இப்னு ஜபல் (ரழி), உபை இப்னு கஅப் (ரழி), அபூஹுதைபாவின் அடிமை ஸாலிம் (ரழி)’ (புகாரி)

எமது சமூகத்தில் சமூகத்தோடு இரக்கம் கொண்டவர் அபூபக்ர் (ரழி). மார்க்கத்தை பொறுத்த வரை கடுமையானவர் உமர் (ரழி). தீர்ப்பு வழங்குவதில் மிகச் சிறந்தவர் அலி (ரழி). வாரிசுரிமைச் சட்டம் பற்றிய அறிவில் மிகைத்தவர் ஸைத் இப்னு ஸாபித் (ரழி). ஹலால் ஹராம் பற்றி மிக்க அறிவுள்ளவர்கள் முஆத் இப்னு ஜபல் (ரழி).

இதே போன்று நடைமுறை மூலமும் சிலரை இனம் காட்டியுள்ளார்கள். அபூ உபைதா (ரழி) அவர்களை அமானுல் உம்மத் என்றார்கள். உஸ்மான் (ரழி) அவர்களின் வெட்க உணர்வைப் பாராட்டினார்கள். அகழ் போராட்டத்தின் போது பெண்களின் பாதுகாப்புக்காக ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழி) அவர்களை அமர்த்தினார்கள். அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது குழுத் தலைவராக ஜஃபர் இப்னு அபூதாலிப் (ரழி) அவர்களை நியமித்தார்கள். ஹிஜ்ரத்துக்கு முன்னர் முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களை யஸ்ரிபுக்குத் தனது பிரதிநிதியாக அனுப்பி வைத்தார்கள். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களை தப்ஸீர் துறையில் வளர்த்து விட்டார்கள். ஸைத் இப்னு ஸாபித் (ரழி) அவர்களை மொழித்துறைக்குப் பயிற்றுவித்தார்கள்.

ஏற்கனவே அறபு மொழியை எழுதக்கற்றுக் கொண்ட ஸைத் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அபரானி, சுர்யானி மொழிகளைக் கற்றுக் கொண்டார்கள். தொடர்ந்து பாரசீக மொழியை கிஸ்ரா மன்னனின் தூதர்களிடம் 18 நாட்களில் கற்றுக் கொண்டார். உரோம மொழியை நபி (ஸல்) அவர்களின் பாதுகாவலர்களிடமிருந்தும், அபிசீனிய, கிப்திய மொழிகளை நபியவர்களின் பணியாளர்களிடமிருந்தும் கற்றுக் கொண்டார்கள். (இப்னு கஸீர்) என அறியும் போது நபி (ஸல்) அவர்களின் தனியாள் தொடர்பையும், இனம் காணும் திறமையும் வழிகாட்டல் முறையையும் மிகத் தெளிவாகவே விளங்கிக் கொள்ள முடிகின்றது. ஒரு சிரேஷ்ட ஸஹாபியாக இருந்தும் கூட, அவர் பதவி கேட்டும் கூட, அபூதர் (ரழி) அவர்களை எந்த நிருவாகப் பணிக்கும் அமர்த்தவில்லை என்பதும் நோக்கத்தக்கதாகும்.

ஹிஜ்ரத் பயணத்தின் போது, அபூபக்ர் (ரழி) அவர்களைப் பயணத் தோழராக அமர்த்தியமை, அவரது மகனை (அப்துல்லா) உளவாளியாகவும், அவரது மகளை (அஸ்மா) உணவு வழங்குபவராகவும், அவரது ஆட்டிடையனை (ஆமிர் பின் புஹைரா) பால் வழங்குபவராகவும் தடயங்களை அழிப்பவராகவும் அப்துல்லா பின் உரைகத் என்ற முஸ்லிம் அல்லாதவரை வழிகாட்டியாகவும், அலி (ரழி) அவர்களை அமானிதமாக வைக்கப்பட்டிருந்த பொருள்களை திருப்பிக்கொடுப்பவராகவும் அமர்த்தியமை நபி (ஸல்) அவர்கள் தமது மாணவர்களை – ஸஹாபாக்களை சரியாக இனங்கண்டிருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக அமைகின்றன.

எனவே தான், ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவருக்குப் பொருத்தமான இயலுமை, ஒத்துப்போகும் தன்மை என்பவற்றைப் புரிந்து பொறுப்புக்களைச் சுமத்துமாறு அவர்கள் கூறினார்கள். இவை மாணவரைப் பயிற்றுவிப்பதற்கு சிறந்த வழிகாட்டல்களாக அமைந்துள்ளன. தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அல்லது வந்தமர்ந்துள்ள மாணவர்களின் பலம், பலவீனம் என்பவற்றை இனங்கண்டு உரிய உத்திகளைக் கையாண்டு செயற்படுவதற்கு இது முன்னுதாரணமாக அமைகின்றது.

ஒரு நல்லாசிரியர் கற்றல் – கற்பித்தற் செயற்பாட்டில் ஈடுபடும் போது சில வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். முஆத் இப்னு ஜபல் (ரழி)> அபூ மூஸா அஷ்அரி (ரழி) ஆகிய இருவரையும் யமனுக்கு அனுப்பி வைத்த போது, ‘நீங்கள் கஷ்டப்டுத்தாதீர்கள், இலகுபடுத்துங்கள்; வெறுப்பூட்டும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள், நன்மாராயம் கூறுங்கள் (புகாரி) என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் கற்பியுங்கள்; இலகுபடுத்துங்கள்; கஷ்டப்படுத்தாதீர்கள். நன்மாராயம் கூறுங்கள்; வெறுப்பூட்டாதீர்கள். கோபம் வந்தால் மௌனமாக இருந்து விடுங்கள் (முஸ்னத் அஹ்மத்) என்றும், கற்றுக் கொடுங்கள்; கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். கடும்போக்குக் கொண்டவர்களை விட ஆசிரியர் சிறந்தவர் (பைஹகி) என்றும் வலியுறுத்தியுள்ளார்கள்.

இவ்வாறான நெறிமுறைகளுக்கேற்ப> நபி (ஸல்) அவர்கள் தன்னோடு நடந்து கொண்ட முறையை விபரித்த முஆவியா பின் ஹகம் அஸ்ஸுலமி (ரழி) அவர்கள் பின்வருமாறு பாராட்டுகிறார்கள். ‘நபி (ஸல்) அவர்களுக்கு எனது தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும். அவர்களைப் போன்ற மிகச் சிறந்த முறையில் கற்பிக்கும் ஆசிரியரை இதற்கு முன்போ பின்போ நான் கண்டதில்லை. அறியாத நிலையில் தொழுகையில் தும்மியவருக்கு நான் பதில் கூறியதால் ஏற்பட்ட அசாதாரண சூழலில் தவறு செய்த என்னை அவர்கள் கடுமையான வார்த்தைகளால் பேசவில்லை; ஏசவில்லை; அடிக்கவுமில்லை. தொழுகையை நிறைவேற்றி முடிந்ததும், இந்தத் தொழுகையில் சாதாரண நிலையில் பேசுவது போல பேசக்கூடாது. தஸ்பீஹ், தக்பீர், திலாவத் போன்றன மட்டுமே அதில் இடம்பெற வேண்டுமென அறிவுரை பகர்ந்தார்கள்.

தொடரும்…

Leave A Comment