முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்மாதிரியான முதன்மை ஆசிரியர் (பகுதி 6)

March 4, 2023
572 Views

எம். எச். எம். நாளிர்

 பகுதி 6 ….

  1. கற்போர் பலதரம்

கற்போருக்கிடையே பல்வேறு தரத்தவர்கள் இருப்பார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் உவமானமொன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய நேர்வழி சார்ந்த அறிவு மழைக்கு ஒப்பானது. வானிலிருந்து பொழியும் மழை நீர், நிலத்தில் விழுகின்றது. அந்த மழை நீரை நிலத்தின் சில பகுதிகள் உறிஞ்சுக் கொள்கின்றன. பின்னர் அவை, மேய்ச்சலுக்கான புற்களும், தாவரங்;களும், உண்பதற்கான பயிரினங்களும் வளர்வதற்கான போசிப்பை வழங்குகின்றன. வேறு சில பகுதிகள், நிலத்துக்கடியில் நீரைச் சேகரித்து மக்கள் பாவனைக்காகவும்குடிக்கவும், பாசனத்துக்கும், மந்தைகள் நீர் அருந்துவதற்கும் வழங்கிக் கொண்டிருக்கின்றன. மற்றும் சில பகுதிகள் கட்டான்தரையாக நீரை உறிஞ்சாதும், சேமிக்காதும் ஓட்டிவிடுகின்றன. இவ்வாறு கல்வி கற்போர் முதலிரு வகை நிலங்கை போல இருக்க வேண்டுமென போதிக்கப்படுகின்றது.

ஸஹாபாக்கள் கற்றல்கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுவதைத் தூண்டுவதற்காக, நபி (ஸல்) அவர்கள் போதனைகளோடு மட்டும் நின்றுவிடவில்லை. அதனை நடைமுறையிலும் காண்பித்துள்ளார்கள்.

ஒரு முறை, மஸ்ஜிதில் இரண்டு வட்டங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. ஒன்று, பிரார்த்தனை வட்டம். அடுத்தது, கல்வி வட்டம். இரண்டு வட்டங்களையும் அவதானித்த நபி (ஸல்) அவர்கள், இரு வட்டங்களும் நல்ல செயற்பாட்டிலேயே ஈடுபடுகின்றன. எனினும், ஒரு குழுவினரை விட மற்ற குழுவினர் உயர்ந்தவர்கள். அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றனர், அவனை விரும்பி சார்ந்து நிற்கின்றனர். அவன் விரும்பினால் அவர்களுக்கு கொடுப்பான். சிலவேளை கொடுக்காமலும் விடலாம். ஆனால் அடுத்த குழுவினர் அறிவைத் தேடுகிறார்கள். அறியாதவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். அவர்கள் உயர்ந்தவர்கள். நான் ஆசிரியனாகவே அனுப்பப்பட்டுள்ளேன் என்று கூறி கல்வி வட்டத்தில் இணைந்து கொண்டார்கள். (தாரமி)

  1. மாணவர் மையம்

எல்லாத் துறைகளையும் போலவே கல்வித் துறையிலும் முதலில் அனுபவங்கள் பெறப்படுகின்றன. பின்னர் அவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டு கோட்பாடுகளாக வரையறுக்கப்படுகின்றன. அந்த வகையில், இன்று கற்றல்கற்பித்தல் செயற்பாடுகளில் விதந்துரைக்கப்படும் உத்திகளில் பெரும்பாலானவை நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியிலிருந்தே பெறப்படுகின்றன என்பதை காண முடிகின்றது. இதற்கு, நபி (ஸல்) அவர்கள், காலத்தால் முந்தியவராக இருப்பது மட்டுமன்றி, அவர்களது அனைத்து செயற்பாடுகளும் ஆதாரங்களோடு எழுத்துருவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதும் அவை ஆய்வுக்கு விருந்தாக அமைந்தன.

கற்றல் கற்பித்தற் செயற்பாட்டில் சேர் ஜோன் அடம்ஸ் என்பாரின் கூற்று ஒரு மூலவாக்காகக் கொள்ளப்படுகின்றது. ஜோனுக்கு லத்தீன் கற்பிக்கும் ஆசிரியர், லத்தீன் மொழியை மாத்திரம் தெரிந்தவராக இருந்தால் போதாது. ஜோனைப் பற்றியும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.என்பதே அந்த வாக்காகும். இங்கு ஆசிரியர் பாடத்தில் நிபுணத்துவமுடையவராக மட்டுமன்றி கற்போன் பற்றிய தெளிவையும் உணர்ந்தவராக இருக்க வேண்டுமென்பது வலியுறுத்தப்படுகின்றது.

(ஸஹாபி என்ற சொற்பிரயோகத்தின் முக்கியத்துவம் இங்கும் எடுத்துக் காட்டப்படுகின்றது) ஆசிரியர்மாணவர் அல்லது கற்பிப்போர்கற்போர் உறவு சட ரீதியானதாக மட்டுமன்றி உளரீதியாகவும் அமையும் போது தான் கற்பித்தற் செயற்பாடு வெற்றி பெற முடியும். இந்த வெற்றியை ஈட்டிக் கொள்வதற்காகவே நபி (ஸல்) அவர்கள், தமது மாணவரை தோழர்ஸஹாபி என அழைத்துக் கொண்டார்கள். அதன் மூலம் ஆசிரிய மாணவர் உறவு பலம்பெற்றது.

 தொடரும்

Leave A Comment