– எம். எச். எம். நாளிர் –
பகுதி 5 ….
- எழுதக்கற்றல்
அறபு நாட்டு மக்கள் எழுத வாசிக்கத் தெரியாதவர்களாக இருந்தார்கள் என்பதைக் குறிப்பிட்டோம். எனவே, அந்த உம்மிச் சமூகத்தை எழுத வாசிக்கத் தெரிந்த சமூகமாக மாற்ற வேண்டிய தேவையும் பொறுப்பும் நபி (ஸல்) அவர்களுக்கு இருந்தன. அதனை நிறைவேற்றும் வகையில் நபி (ஸல்) அவர்கள் தமது மதீனா வாழ்க்கைப் பகுதியில் ஆரம்ப கட்டத்தைப் பயன்படுத்தினார்கள். மக்கா குறைஷியரில் சிலர் எழுத வாசிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். எனினும் மதீனாவின் அன்ஸாரிகள், அவர்களை விட பின்தங்கியிருந்தார்கள். இதனை நிவர்த்திப்பதற்காக பத்றுப் போரில் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் எவர்கள், எழுத வாசிக்கத் தெரிந்திருந்தார்களோ அவர்கள் ஒவ்வொருவரும் எழுத்தறிவில்லாத மதீனாவின் சிறுவர்கள் பதின்மருக்கு எழுத வாசிக்கக் கற்றுக் கொடுத்துவிட்டு விடுதலை பெறலாம் எனப் பிரகடனப்படுத்தினார்கள். இந்த சிறுவர்களிலிருந்து எழுத்தறிவை ஆரம்பித்தமை மற்றொரு முன்மாதிரியாகும்.
இவ்வாறு கைதிகளிடம் கற்றுக் கொண்டவர்களில் ஒருவரே ஸைத் இப்னு ஸாபித் (ரழி) அவர்களாவார். இவர், பத்றில் போராடுவதற்காக ஆயுதபாணியாக வந்தார். அப்போது, சிறுவர்கள் படையணியில் சேர்க்கப்பட மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கவே, கவலையோடு திரும்பிச் சென்றார். பின்னர்> தாயாரின் ஆலோசனையை ஏற்று அல்குர்ஆனின் சில பகுதிகளை மனனமிட்டு நபி (ஸல்) அவர்களிடம் ஒப்புவித்த போது> மகிழ்வுற்ற நபி (ஸல்) அவர்கள், அவரை பத்றுக் கைதி ஒருவரிடம் எழுத வாசிக்கக் கற்பிப்பதற்காக ஒப்படைத்தார்கள்.
ஸஹாபாக்களில் சிலர் உரோம, பாரசீக, அபிசீனிய மொழிகளைப் பேசத் தெரிந்திருந்தார்கள். அபரானி, சுர்யானி மொழிகளை எழுதத் தெரிந்தவர்கள் எவரும் இருக்கவில்லை. எனவே, சுர்யானி மொழியைக் கற்குமாறு நபி (ஸல்) அவர்கள் ஸைத் (ரழி) அவர்களை கேட்டுக் கொண்டார்கள். அதற்கிணங்க யூதர்களிடம் சென்று பதினைந்து நாட்களில் (அவர்கள் ஸைத் (ரழி) அவர்களுக்கு கற்பிப்பதை வெறுத்த போதும்) அம்மொழியில் தேர்ச்சி பெற்றார்கள். தொடர்ந்து அபரானி மொழியையும் கற்றுக் கொண்டார்கள். இதன் காரணமாக யூதர்களிடமிருந்து வரும் கடிதங்களை நபி (ஸல்) அவர்களுக்கு வாசித்துக்காட்டும் பணியும், நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு எழுதும் கடிதங்களை வடிவமைப்பதற்கான பணியும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
தொடர்ந்து, மக்கள் எழுத்து வடிவங்களை கற்பதற்காக, ஜாஹிலிய்யாக் காலத்தில் காதியாக இருந்த அப்துல்லா இப்னு ஸஈத் பின் ஆஸ் என்பவரையும், உப்பாதா பின் ஸாபித் (ரழி) அவர்களையும் நபியவர்கள் நியமித்ததாக கலாநிதி எம். ஹமீதுல்லா குறிப்பிடுகிறார்.
- பெண்கள்
ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் எழுத்தறிவைக் கற்று வந்தார்கள். ‘பெண்களுக்கு எழுத்தறிவையும் ஸூறா நூரையும், தையலையும் கற்றுக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் தூண்டினார்கள். நபி (ஸல்) அவர்களின் மனைவியான ஹப்ஸா (ரழி) அவர்களுக்கு எழுத்தறிவைக் கற்பிப்பதற்காக ஷிபா என்ற பெண் அமர்த்தப்பட்டிருந்தார். (அஹ்;மத்) அன்றைய பெண்களில், இந்த ஷிபா பின்தி அப்துல்லாஹ் அல் அதவிய்யாவுடன் ஆயிஷா பின்தி ஸஅத், கரீமா பின்தி அல்மிக்தாத், உம்மு குல்ஸும் பின்தி உக்பா, ஹப்ஸா பின்தி உமர் ஆகிய நால்வரும் எழுதவாசிக்கத் தெரிந்திருந்தனர்.
கல்வியை கற்பவனாக, கற்பிப்பவனாக, செவியேற்பவனாக, நேசிப்பவனாக இரு. ஐந்தாமவனாக இருந்து விடாதே. அவ்வாறிருந்தால் அழிந்து விடுவாய் என்று நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியதற்கிணங்க, அறிவையோ, அறிஞர்களையோ வெறுக்கின்ற ஐந்தாவது நபராக இருக்க விரும்பாத ஸஹாபாக்கள் தம்மை கல்வியோடு பிணைந்து கொண்டார்கள். இதற்கு உமர் (ரழி) அவர்கள் சிறந்த எடுத்துக்காட்டாவார்.
அவர், தனது மதீனாச் சகோதரர்களுடன் இணைந்து, நபி (ஸல்) அவர்களின் கல்வி வட்டத்தில் மாறி மாறி அமர்ந்து கொள்ளவும், பின்னர் இருவரும் கற்றுக் கொண்டதை பரிமாறிக் கொள்ளவும், உடன்பட்டுச் செயற்பட்டார்கள். குடும்ப விவகாரமோ, உழைப்போ அவர்கள் கற்றுக் கொள்வதற்குத் தடையாக இருக்கவில்லை.
பெண்கள் நிலையும் இவ்வாறே காணப்பட்டது. அவர்கள் தமது கணவர், சகோதரர்களிடமும், ஏனைய ஸஹாபாக்களிடமும் கேட்டுக் கற்றுக் கொண்டது போன்றே சிலபோது நபி (ஸல்) அவர்களிடமும் கேட்டுக் கற்றுக் கொண்டார்கள். இவர்களுக்கென வாரத்தில் ஒரு நாள் புதன்கிழமை ஒதுக்கப்பட்டிருந்தது.
ஒரு முறை> அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் சத்தியத்தைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. பெண்கள் ஸ்கலிதமானால் குளிக்க வேண்டுமா என்று உம்மு சுலைம் (ரழி) என்ற பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வினவினார். அதற்கு, ‘நீர்த்தன்மையைக் கண்டால்‘ என பதிலளித்தார்கள். இவ்வேளை அன்னை உம்மு ஸல்மா (ரழி) அவர்கள் தமது முகத்தை மூடிக் கொண்டார்கள். (புகாரி) என்றும் அவ்வாறு பெண்கள் மோசமாகி விட்டார்கள் என்று அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாகவும் பதியப்பட்டுள்ளன. (முஸ்லிம்) எனினும் மற்றொரு பொழுது, ‘அன்ஸாரிப் பெண்கள் மிகச் சிறந்த பெண்கள், அவர்களது வெட்கம் மார்க்கத்தைப் படிப்பதிலிருந்து அவர்களைத் தடுக்கவில்லை” என ஆயிஷா (ரழி) அவர்கள் பாராட்டுத் தெரிவித்தார்கள்“ என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடரும்…





