முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்மாதிரியான முதன்மை ஆசிரியர் – பகுதி 17

October 4, 2023
416 Views

– எம். எச். எம். நாளிர் –

பகுதி 17 …

  1. சுய கட்டுப்பாடு : நபி (ஸல்) அவர்கள் மிக எளிமையாக வாழ்ந்தார்கள். எனினும், அவர்களின் மனைவியருள் பலர் ஏற்கனவே வசதிபடைத்தவர்களுடன் வாழ்ந்தவர்களாவர். ஆதலால் அவர்கள் தாராளமாகச் செலவு செய்தார்கள். தமக்கு வழங்கப்படும் செலவினங்களுக்கான தொகையை அதிகரித்துத் தருமாறு கேட்டுக் கொண்டார்கள். இதனை, மனைவியரின் தந்தையரும், பிறரும் பொருத்தமான கோரிக்கையாக ஏற்கவில்லை. உமர் (ரழி) அவர்கள் தனது மகள் ஹப்ஸா (ரழி) வையும், அபூபக்ர் (ரழி) அவர்கள் மனது மகள் ஆயிஷா (ரழி) வையும் கண்டித்தார்கள். இந்நிலையில் நபி (ஸல்) அவர்களோ, தனது மனைவியருக்கு எச்சரிக்கை செய்யும் நோக்கில் ஒரு மாத காலம் அவர்களிடம் செல்வதில்லை, பேசுவதில்லை என முடிவெடுத்தார்கள். தனிமையாக இருந்துவிட்டார்கள்.

நபியவர்கள் தமது மனைவியரை தலாக் சொல்லி விட்டதாக நயவஞ்கர்கள் கதை கட்டிவிட்டார்கள். ஸஹாபாக்களோ கவலைப்பட்டு அழுது கொண்டிருந்தார்கள். உம்மஹாத்துல் முஃமினீன்களும் தத்தம் இல்லங்களில் அழுது கொண்டிருந்தார்கள். இவ்வேளை, உமர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க பலமுறை முயற்சித்தார்கள். மூன்று முறை கேட்கப்பட்டும் அனுமதி கிடைக்கவில்லை. இறுதியாக, அனுமதி கிடைத்தது. உள்ளே நுழைந்த உமர் (ரழி) அவர்கள், “தாங்கள் மனைவியரை தலாக் சொல்லி விட்டீர்களா?” என வினவினார்கள். இல்லை என பதில் கிடைத்ததும், தான் இதனை பகிரங்கப்படுத்தவா எனக் கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதரே, நாம் மக்காவில் குறைஷிப் பெண்களை அடக்கியாண்டோம். மதீனாவிலோ பெண்களை, ஆண்களை ஆள்பவர்களாகக் கண்டோம். இதைப் பார்த்து குறைஷிப் பெண்களும் பழகிக் கொண்டார்கள் என தமது கவலையை வெளிப்படுத்தினார்கள். இந்தச் சூழலில் நபி (ஸல்) அவர்களின் பாய்படுக்கைகளைப் பார்த்து உமர் (ரழி) அவர்கள் அழ ஆரம்பித்துவிட்டார்கள்.

வெளியே வந்த உமர் (ரழி) அவர்கள் தக்பீர் முழக்கத்தோடு நபி (ஸல்) அவர்கள் மனைவியரை தலாக் சொல்லவில்லை என்ற நல்ல தகவலை வெளிப்படுத்தினார்கள். ஸஹாபாக்கள் மகிழ்வடைந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் முதலில் ஆயிஷா (ரழி) அவர்களை சந்தித்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் அழத் தொடங்கி விட்டார்கள். பின்னர், தமக்கு அருளப்பட்ட அல்குர்ஆனின் ஸூறா அஹ்ஸாபின் 28தும் 29தும் ஆயத்துகளை ஓதிக்காட்டினார்கள். உலக வாழ்க்கையில் இன்பங்காண விரும்புவதாயின் உங்களுக்குரியதைக் கொடுத்து விவாக விலக்குச் செய்து கொள்கிறேன். அல்லாஹ்வையும், அவனது தூதரையும், இறுதி நாளையும் விரும்புவதாயின், அல்லாஹ் உங்களுக்கு மகத்தான கூலியை வைத்திருக்கிறான் எனக் கூறி மனைவியரின் தீர்மானத்துக்கு விட்டார்கள். தமது பெற்றோர்களுடனும் கலந்தாலோசித்து முடிவுக்கு வருமாறு கேட்டுக்கொண்டார்கள். எனினும், எல்லா மனைவியரும் நபியவர்களின் மனைவியாக இருக்க விருப்பம் தெரிவித்தார்கள்.

இங்கு நபி (ஸல்) அவர்கள், ஒரு மாத காலம் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடித்த பண்பை காண்கிறோம். ஒரு மாத காலம் மனைவியரோடு பேசாமலும், அணுகாமலும் இருந்த அவர்களின் சுயகட்டுப்பாடு ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாகும்.

 

  1. நிபுணத்துவம் : நபி (ஸல்) அவர்கள், எந்த வேளையில் எந்த துறையில் எந்த வகையில் எவ்வாறு நடக்க வேண்டுமோ அந்த வகையில் செயற்படும் நிபுணத்துவத்தைக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதராக செயற்படுவதற்கு முன்பும், செயற்படுகின்ற போதும், உலகியல் விவகாரங்களாகவோ ஆன்மீக விவகாரங்களாகவோ இருந்த போதும் அவர்கள் நிபுணத்துவமுடையவர்களாக இருந்தார்கள்.

ஸஹாபாக்களை இனம் கண்டமை, தஃவாவுக்குப் பொருத்தமான உத்திகளைக் கையாண்டமை முதலியன இதற்குத் தகுந்த ஆதாரங்களாகும். இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் அதற்குப் பலத்தைத் தேடிக் கொள்வதற்காக உமர் இப்னு கத்தாப் அல்லது அம்ர் இப்னு ஹிஷாம் (அபூஜஹ்ல்) ஆகிய இருவரில் ஒருவரை இஸ்லாத்தின் பக்கம் சேர்த்துவிடுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்து உமர் (ரழி) அவர்களைத் தேடிக் கொண்டமை இதற்கு ஓர் உதாரணமாகும். வியாபாரத்தில் அவர்கள் பெற்றிருந்த நிபுணத்துவம் கதீஜா (ரழி) அவர்களின் வியாபார முகவராக அமரச் செய்ததோடு, அவரது கணவராகவும் மாறக்கூடிய நிலையை ஏற்படுத்தியது. அவர்களது மொழிப்புலமை அல்குர்ஆனை விளங்குவதற்கு வாய்ப்பாக அமைந்தது. முஸ்லிம்கள் ஹிஜ்ரத் சென்ற பின்பும் அப்பாஸ் (ரழி) அவர்களை மக்காவில் வாழச் செய்து அவர்கள் மூலமாக சில பாதுகாப்பையும், பயன்களையும் பெற்றுக் கொண்டமை. உ-ம் : மக்கா வெற்றியின் போது தலைவர் அபூ ஸுப்யானை மனமாற்றம் செய்ய பயன்படுத்தியமை.

தொடரும்…

Leave A Comment