ஸலாமா வாராந்த நினைவூட்டல் 30

November 6, 2026
32 Views

நாவைப் பாதுகாத்துக் கொள்

ஒரு மனிதர் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களிடம் வந்து தனது உள்ளம் கடினமாகிவிட்டதாக முறையிட்டார். அவர் கூறினார்:
“நான் அல்-குர்ஆனை ஓதுகிறேன்; இரவில் தொழுகிறேன்; அதிகமாக நோன்பு நோற்கிறேன். ஆனால் அறிவுரைகளைக் கேட்கும்போது என் கண்களில் கண்ணீர் வருவதில்லை. என் இதயம் ஒரு கல்லைப் போல இருப்பதாக உணர்கிறேன்!”
அப்போது இமாம் அவரை உற்றுப் பார்த்துவிட்டு அவர் எதிர்பாராத ஒரு கேள்வியைக் கேட்டார்கள்:
“மக்களிடம் உமது நாவை எவ்வாறு பயன்படுத்துகிறீர்?”
அந்த மனிதர் ஆச்சரியமடைந்து கூறினார்:
“நான் உம்மிடம் உள்ளத்தின் கடினத்தன்மையைப் பற்றிக் கேட்கிறேன்; நீங்களோ எனது நாவைப் பற்றிக் கேட்கிறீர்களே?”
அதற்கு இமாம் கூறினார்கள்:
“எத்தனையோ உள்ளங்களை ஒரு வார்த்தை சீரழித்திருக்கிறது!
எத்தனையோ வணக்கங்களைப் புறங் கூறுதல் அழித்திருக்கிறது!
எத்தனையோ நாவுகள் அவற்றின் உரிமையாளர்களை நரகத்திற்கு இட்டுச் சென்றிருக்கின்றன!”
பின்னர் அவர் கூறினார்:
“நீ உயிரோட்டமுள்ள உள்ளத்தை விரும்பினால் உனது உபரியான வணக்கங்களை அதிகரிப்பதற்கு முன்னர் உனது நாவைப் பாதுகாப்பதிலிருந்து தொடங்கு.”

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“மக்களை அவர்களின் முகங்களைக் குப்புறத் தள்ளி நரகத்தில் வீழ்த்துவது அவர்களின் நாவுகள் அறுவடை செய்தவற்றைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?” (ஆதாரம்: திர்மிதி)

“சிறந்த வார்த்தையும் ஸதகாவாகும்” (புஹாரி)

இது நபி (ஸல்) அவர்களது பொன்மொழி. எத்தனையோ கருத்துக்களைச் சுமந்துள்ளது. குடும்பம் நண்பர்கள் அயலவர்கள் தலைவர்கள் சிறியவர்கள் பெரியோர் ஏழைகள் பணக்காரர்கள் என அனைவருடன் நாம் உறவாடுகின்றோம்.
கற்புள்ள சொற்களைப் பயன்படுத்தல் நல்ல வழிகாட்டல்களை வழங்கல் அன்பாகக் கதைத்தல் பிரார்த்தனை செய்தல் பயனுள்ள விடயங்களைக் கலந்துரையாடல் என பல விடயங்களை நடைமுறைகளாக எடுத்துக் கொள்ள முடியும்.
இவை அனைத்தும் ஸதகாவின் நன்மையைப் பெற்றுத் தரும்.

ஸதகா

நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாக (அவனுடைய வழியில் செலவு செய்து) கடன் கொடுத்தால் அவன் அதை உங்களுக்குப் பன்மடங்கு ஆக்கித் தருவான்; மேலும் உங்களுக்கு மன்னிப்பும் வழங்குவான். ஏனெனில் அல்லாஹ் மிகவும் நன்றியுடையோன்; மிக்க பொறுமையுடையோன். (அல்-குர்ஆன்)

Leave A Comment