துஆக் கேட்பதை விட்டு விடாதீர்கள்
அல்லாமா அப்துர் ரஹ்மான் அஸ்-ஸஅதீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
‘எத்தனையோ மார்க்கம் சார்ந்த அல்லது இவ்வுலக வாழ்க்கை சார்ந்த தேவைகள் உன்னை அல்லாஹ்விடம் அதிகமாக மன்றாடவும் அவனிடம் அடைக்கலம் தேடவும் அவனையே முற்றிலும் சார்ந்திருக்கவும் தூண்டியிருக்கின்றன!
மேலும் எத்தனையோ பிரார்த்தனைகளின் மூலம் அல்லாஹ் துன்பங்களையும் பல்வேறு தீங்குகளையும் உன்னைவிட்டு நீக்கியிருக்கின்றான்.
எனவே அதிகமாக பிரார்த்தனை செய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டவர் தனது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவது நெருங்கிவிட்டது என்று மகிழ்ச்சியடையட்டும்.
தனது அனைத்து தேவைகளையும் தனது இறைவனிடமே ஒப்படைத்து அவனிடம் வேண்டுபவர் அவனது அருளாலும் நற்கூலியாலும் அவை நிறைவேறும் என்று மனநிம்மதியுடனும் நம்பிக்கையுடனும் இருக்கட்டும்.”
ஒவ்வொருவருக்கும் பொருத்தமான அருள்களை அல்லாஹ் வழங்கியுள்ளான்.
உனது வாழ்க்கையை வேறு யாருடைய வாழ்க்கையுடனும் ஒப்பிடாதே. ஏனெனில் ஒவ்வொரு தனிமனிதருக்கும் பொருத்தமான அருட்கொடைகளை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான்.
நீ இப்போது இருக்கும் நிலையைக் குறித்து நன்றியுள்ளவனாக இரு. திருப்தியுடன் இருப்பதை உனது இயல்பாகப் பழக்கப்படுத்திக்கொள்.
நீ அனுபவித்துக் கொண்டிருக்கும் அருட்கொடைகள் வேறு ஒருவரின் கனவுகளாகவும் ஆசைகளாகவும் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்.
வலி நிவாரண மருந்துகள் இன்றி வலியில்லாமல் உறங்குகிறாய்;. எந்தவொரு மருத்துவக் கருவியின் உதவியும் இன்றி சுவாசிக்கிறாய்;. உனது வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறாய். யாரிடமும் உதவி கேட்கச் செல்லாமல் உணவு உண்கிறாய்.
எனவே உனது நாட்களை அல்ஹம்துலில்லாஹ் என்றும் நன்றியுணர்வுடனும் நிரப்பிக்கொள். அப்போது அல்லாஹ்வின் அருட்கொடைகளும் வாழ்வாதாரங்களும் உன்மீது மேலும் மேலும் பெருகும்.
“நீங்கள் நன்றி செலுத்தினால் நிச்சயமாக உங்களுக்கு மேலும் அதிகமாக வழங்குவேன்”
(அல்-குர்ஆன்-14:07)
ஸதகா
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய நற்செயல்கள் அனைத்தும் நின்றுவிடும். மூன்றைத் தவிர: தொடர்ந்து பயனளிக்கும் தர்மம் பயனளிக்கும் கல்வி மற்றும் அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை ஆகியவை.”




