ஒவ்வொரு அருளும் அல்லாஹ்விடமிருந்தே وَمَا بِكُم مِّن نِّعْمَةٍ فَمِنَ اللَّهِ
உங்களைச் சுற்றி எவ்வளவு ஆரவாரமும் குழப்பமும் உண்மையைத் திரித்துக் காட்டும் முயற்சிகளும் இருந்தாலும் உங்கள் இதயத்தில் ஈமான் உறுதியாக நிலைத்திருக்குமானால் அது அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய மிகப் பெரிய அருளாகும் என்பதை உணருங்கள். ஏனெனில் சத்தியத்தைக் கேட்ட ஒவ்வொருவரும் அதில் உறுதியாக நிலைத்திருக்கவில்லை. நேரான வழியை அறிந்த அனைவரும் அதில் தொடர்ந்து பயணிக்கவும் இல்லை. அதனால்தான் அறிஞர்கள் கூறியுள்ளனர்:
“நேர்வழியில் உறுதியாக நிலைத்திருப்பதே மிகப் பெரிய கராமத் (இறையருள்) ஆகும்.”
மக்கள் உங்களைப் பார்த்து நீங்கள் தனித்துவமானவர் என்று நினைக்கலாம்.
நீங்கள் அடைந்த உயர்வும் வெற்றியும் உங்கள் அறிவின் பலனோ உங்கள் முயற்சியின் விளைவோ மட்டுமே என்று அவர்கள் கருதலாம்.
ஆனால் அல்லாஹ்வின் அருளைக் கெடுக்கும் மிகப் பெரிய ஆபத்து அந்த அருளை நமக்கே உரியதாகக் கருதுவதுதான். ஏனெனில் ஒரு இறை நம்பிக்கையாளர் நன்கு அறிந்திருக்கிறார்: அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு வெற்றிகரமான அடியின் பின்னாலும் யாருடைய கண்களுக்கும் புலப்படாத அல்லாஹ்வின் அருளும் பராமரிப்பும் இருக்கின்றன.
وَمَا بِكُم مِّن نِّعْمَةٍ فَمِنَ اللَّهِ
‘உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருளும் அல்லாஹ்விடமிருந்தே வந்ததாகும்”. (16:53)
சிறந்த வாழ்வாதாரம்
ஐந்து தீமைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டதே சிறந்த வாழ்வாதாரமாகும்.
1. சம்பாதிப்பதில் பாவம் செய்யாமல் இருப்பது.
2. பிறரிடம் உதவி கோருவதில் தாழ்ந்து கெஞ்சாமல் இருப்பது.
3. தொழில் அல்லது வியாபாரத்தில் மோசடி செய்யாமல் இருப்பது.
4. பாவங்களைச் செய்வதற்கான கருவியாக வாழ்வாதாரத்தை மாற்றிக் கொள்ளாமல் இருப்பது.
5. அநியாயக்காரர்களுடன் பழகி அவர்களுக்கு துணை நிற்காமல் இருப்பது.
(ஹில்யதுல் அவ்லியா)
வீழ்ச்சியடைந்த சமூகங்களின் காரணிகளை ஆராய வேண்டும்.
‘மருத்துவக் கல்லூரிகளில் மரணமடைந்தவர்களின் உடல்களைப் பரிசோதித்து அவர்கள் எதனால் இறந்தார்கள் என்பதை அறிகிறோம். அந்த அறிவு உயிருடன் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பெரும் பயனைத் தருகிறது.
அதுபோலவே தோல்வியடைந்து வீழ்ச்சியடைந்த சமூகங்களையும் நாம் ஆராய வேண்டும். அவற்றின் உள்ளார்ந்த நோய்கள் மற்றும் பலவீனங்களை கண்டறிய வேண்டும். அந்தக் குறைகளையும் நோயின் காரணங்களையும் அறிந்தால் அவற்றிலிருந்து விடுபட்டு அவற்றைத் தவிர்க்க முடியும்.
ஆனால் தங்களின் நோய்கள் நாளுக்கு நாள் மோசமடைந்தாலும் அவற்றை ஆராயவும் அவற்றிலிருந்து விலகவும் விரும்பாத சமூகங்கள் இறுதியில் அந்த நோய்களுடனேயே தொடர்ந்து வாழ்ந்து அதே நோயினாலேயே அழிந்து போகின்றன”
(ஷெய்க் முஹம்மத் அல்-கஸ்ஸாலி)
ஸதகா
நபி ﷺ கூறினார்கள்: “ஒருவர் நேர்மையான வழியில் சம்பாதித்ததில் இருந்து ஒரு பேரீச்சம் அளவு தர்மம் செய்தால் அல்லாஹ் அதைத் தனது வலக் கரத்தால் ஏற்று அதன் உரிமையாளருக்காக அதை மலையளவு போல் ஆகிவிடும் வரை வளர்த்தெடுக்கிறான்.”




