ஸலாமா வாராந்த நினைவூட்டல் 18

August 13, 2026
10 Views

வீண் தர்க்கத்தைத் தவிருங்கள்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தான் உண்மையில் இருந்தாலும் வீண் தர்க்கத்தை விட்டுவிடுபவருக்கு சுவனத்தின் ஓரத்தில் ஒரு இல்லத்திற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.”
பின்வரும் ஐந்து வகையினருடன் விவாதிப்பதைத் தவிருங்கள்:

  • பிடிவாதக்காரன்
  • அகந்தையுடன் உண்மையை மறுப்பவன்.
  • எல்லாவற்றிலும் தலையிடுபவன்.
  • எப்போதும் முரண்படுவதை இயல்பாகக் கொண்டவன்
  • சிந்திக்காமல் பிறரைப் பின்பற்றுபவன்

வாழ்க்கையில் மனிதர்களுடன் பழகுவதற்கான ஒரு பொன்னான விதி:
இந்த ஐந்து பண்புகளும் ஒருவரிடம் இருந்தால் மட்டுமே அவருடன் கருத்துப் பரிமாற்றம் செய்யுங்கள்:

  • நல்ல பண்புடையவர்.
  • நீதியுணர்வு கொண்டவர்.
  • உண்மையை நாடுபவர்.
  • ஆதாரத்தைப் பின்பற்றுபவர்.
  • உண்மையை அறிய முயற்சி செய்பவர்.

அப்போதுதான் உரையாடல் பயனுள்ளதாக இருக்கும்; இல்லையெனில் அது நேரத்தையும் மன அமைதியையும் வீணாக்கும்.

இன்று நீங்கள் சிந்தும் வியர்வை நாளை உங்கள் வெற்றியின் ஒளி

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
‘ஒரு மணி நேரமாவது கல்வி கற்பதற்காக ஏற்படும் தாழ்மையையும் சிரமத்தையும் அனுபவிக்காதவன் தன் வாழ்நாள் முழுவதும் அறியாமையின் கசப்பைச் சுவைக்க நேரிடும்.”
மனனம் செய்வதில் சிரமம் ஏற்படலாம். பாடங்களை மீளாய்வு செய்வதில் சலிப்பு தோன்றலாம் பாடங்கள் பாரமாக உணரப்படலாம்.
ஆனால் நினைவில் கொள்ளுங்கள். இவை அனைத்தும் சில கணங்களுக்கான சிரமங்களே. ஆனால் அறிவின் பலன் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் நிலைத்திருக்கும்.
ஆகவே பொறுமையுடன் முயற்சி செய்யுங்கள். இன்று நீங்கள் சிந்தும் வியர்வை நாளை உங்கள் வெற்றியின் ஒளியாக மாறும்.

அல்லாஹ் விதித்த தீர்ப்புகளைப் பார்க்கும் பண்பாடு

அல்லாஹ் விதித்த தீர்ப்புகளைப் பார்க்கும் பண்பாடு அவன் உங்களுக்கு விதித்ததை மனமுவந்து ஏற்றுக்கொள்வதாகும். அதில் மனநிறைவும் அமைதியும் அடைவதாகும். மேலும் அல்லாஹ் உங்களுக்கு எதை விதித்திருந்தாலும் அதை ஒரு நோக்கம் இல்லாமல் அல்லாஹ் விதிக்கவில்லை என்பதை உறுதியாக நம்புவதாகும். ஆகவே அதற்காக அல்லாஹ்வைப் புகழ்வதும் அவனுக்கு நன்றி செலுத்துவதும் அவசியமாகிறது. இதனால்தான் அல்லாஹ் பொறுமையாளர்களைப் புகழ்ந்து பின்வருமாறு கூறுகின்றான்:
‘அவர்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக அவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்கள்’ என்று கூறுவார்கள்.” (அல்குர்ஆன் 2:156)

ஸதகா

நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாக (அவனுடைய வழியில் செலவு செய்து) கடன் கொடுத்தால் அவன் அதை உங்களுக்குப் பன்மடங்கு ஆக்கித் தருவான்;. மேலும் உங்களுக்கு மன்னிப்பும் வழங்குவான். ஏனெனில் அல்லாஹ் மிகவும் நன்றியுடையோன் மிக்க பொறுமையுடையோன். (அல்-குர்ஆன்)

Leave A Comment