நற்செயல்கள் ஈமானுக்கு உணவாகும்
நற்செயல்கள் மரத்திற்கு நீர் ஊற்றும் மழையைப் போன்றவை. ஈமான் என்பது இதயத்தில் வேரூன்றிய ஒரு மரமாகும். அந்த ஈமான் என்ற மரத்தை நற்செயல்களே போஷித்து வளர்க்கின்றன.
எனவே ஒரு மனிதன் அல்லாஹ் விரும்பிய முறையில் ஒரு நற்செயலைச் செய்யும் ஒவ்வொரு முறையும் தனது ஈமான் வலுப்பெற்று அதிகரிக்கின்றது என்பதை அவன் உணர்வான். அத்துடன் அவன் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுக் கொள்வதை தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றான்.
நன்றியுணர்வு – அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல்
இபாதத்களின் பிரதான நோக்கம் தக்வாவை அடைவது. நன்றியுணர்வு என்பது தக்வாவின் பிரதான விளைவுகளில் ஒன்று. “பத்ர் போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.” (3:123)
மக்களில் அதிகமானவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள் என்பது ஷைத்தானின் சவால் என அல்குர்ஆன் கூறியுள்ளது.
“பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும் அவர்கள் பின்னும் அவர்கள் வலப்பக்கத்திலும் அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்;. ஆதலால் நீ அவர்களில் பெரும்பாளோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய் (என்றும் ஷைத்தான் கூறினான்).” (7:17)
இதனால் தான் நன்றியுடன் வாழ்வது படைப்புக்களில் சிறந்தவர்களின் பண்பாகும்.
“அவை சுலைமான் விரும்பிய மிஹ்ராபுகளையும் சிற்பங்களையும் (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும் நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. ‘தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே’ (என்று கூறினோம்).” (34:13)
இப்பண்பின் மூலமே அல்லாஹ் நபிமார்களைப் புகழ்ந்து பேசினான். நபி (ஸல்) அவர்களும் தன்னை ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்கக் கூடாதா” என தன்னைப் பற்றிக் கூறினார்கள்.
எனவே நன்றியோடு வாழ்வோம். தண்டனையில் இருந்து எம்மைக் காத்துக் கொள்வோம்.
“நீங்கள் நன்றி செலுத்தி இறை நம்பிக்கை கொண்டுமிருந்தால் உங்களை தண்டிப்பதால் அல்லாஹ் என்ன செய்யப் போகிறான்? அல்லாஹ் நன்றியை மதிப்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் உள்ளான்” (4:147).
ஸதகா
நபி ﷺ கூறினார்கள்: “ஒருவர் நேர்மையான வழியில் சம்பாதித்ததில் இருந்து ஒரு பேரீச்சம் அளவு தர்மம் செய்தால் அல்லாஹ் அதைத் தனது வலக் கரத்தால் ஏற்று அதன் உரிமையாளருக்காக அதை மலையளவு போல் ஆகிவிடும் வரை வளர்த்தெடுக்கிறான்.”





