– ஸலாமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்
நாட்டின் தேசியப் பாதுகாப்பை பலப்படுத்தும் விவகாரத்தில் ஸலாமாவின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் முதன்மையானது என்பதில் இருகருத்துக்கு இடமில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஒவ்வொரும் சமூகத்தில் காத்திரமான ஒரு பணியை செய்ய வேண்டும், தீவிரமில்லாத, நடுநிலையான சமூகத்தை உருவாக்க அயராது உழைக்க வேண்டும் என ஸலாமா சொஸைட்டியின் முதலாவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
கடந்த 09.11.2019ம் திகதி ஸலாமா சொஸைட்டியின் வருடாந்த பொதுக் கூட்டம் கொழும்பு அல்-ஹிதாயா கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சுமார் 150 அங்கத்தவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கடந்த ஆண்டில் நாட்டு நலனையும் சமூக நலனையும் இலக்காகக் கொண்டு சாதித்த செயற்பாடுகள், அர்ப்பணங்கள், முயற்சிகள், சாதனைகளின் போது முகம் கொடுத்த சவால்கள் தொடர்பான அறிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
ஸலாமா சொஸைட்டியின் தலைவர் மேலும் தனதுரையில், ஒரு நாடு பாதுகாப்பாக இருக்கும்போதுதான் அது வளம் பெறும். அபிவிருத்தியடையும். குடிமக்கள் நிம்மதியாக வாழும் சூழல் பிறக்கும். நாட்டின் நற்பெயர் வலுப்பெறும். ஆனால் ஒரு தேசத்தின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும்போது மேற்சொன்ன அனைத்தும் பாதிக்கப்படும். இதனால்தான் இஸ்லாம் தேசிய பாதுகாப்பிற்கு அதிவிஷேட முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக அல்குர்ஆனின் வசனங்களை மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டார்.
மேலும் ஸலாமா சொஸைட்டி சமூகத்திற்கும் நாட்டிற்கும் செய்த பணிகளைப் பற்றிக் குறிப்பிட்டார். குறிப்பாக, ஒவ்வொரு அங்கத்தவரும் தமது பிரதேசங்களில் சமூகப் பணியைச் செய்யக்கூடிய நல்ல பிரஜைகளை உருவாக்கினோம். மற்றும் இஸ்லாமிய விழுமியங்களை பேணி வாழும் குடும்பங்களை நிர்மாணிப்பதில் நாம் கவனம் செலுத்தினோம். இஸ்லாத்தின் நடுநிலையான சிந்தனையை சமூகத்திற்குக் கொண்டு சென்றோம். சகவாழ்வு வேலைத்திட்டத்தில் ஒரு காத்திரமான பங்களிப்பை தேசிய ரீதியில் நாம் செய்தோம்.
சமூகத்தின் ஏனைய நிறுவனங்களுடனும் தனிநபர்களுடனும் இணைந்து செயற்பட்டோம். நற்பணிகளில் ஒத்துழைப்பு வழங்கினோம். எமது செயற்பாடுகள் மூலமாக தீவிர சிந்தனைகள், பிழையான நடத்தைகள் போன்றவற்றிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர். எனவே, இப்பணிகளைச் செய்வதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன், சமூகத்திற்கும் நாட்டிற்கும் செய்யப்பட வேண்டிய பணிகள் அதிகம் என்பதால் அனைவரும் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அத்துடன் எதிர்வரும் 2019 – 2023 வரையான நான்கு ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. ஸலாமாவின் புதிய தலைவராக மீண்டும் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், உபதலைவர்களாக அஷ்ஷெய்க் ரயீஸுல் இஸ்லாம், எஸ். நிஹாஸ் ஆசிரியர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். பொதுச் செயலாளராக எம்.எப்.எம். பாஹிம் அவர்களும் பொருளாளராக எம். நியாஸ் மொஹிதீன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். மேற்குறிப்பிடப்பட்ட பதவிதாங்குனர்களுடன் நிர்வாக சபை அங்கத்தவர்களாக அஷ்ஷெய்க் ஏ.டபிள்யு.எம். பாஸிர், அஷ்ஷெய்க் எம்.எப். முஹம்மத், ஆர்.எம். நயீம், எம்.எம்.எம். பாஸில் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
கௌரவ தலைவர் அவர்கள் தனது உரையில், மனிதநேயம் என்பது 2020ம் ஆண்டின் ஸலாமா தினத் தொனிப்பொருளாக தெரிவு செய்துள்ளதாக சபையில் பிரகடனம் செய்தார்கள். இத்தேசத்தில் மனித நேயம் தலைத்தோங்க ஸலாமாவின் அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்பதோடு, இலங்கை வாழ் அனைத்து சமூகத்தினரையும் இதற்காக இணைத்து செயற்படுமாறு தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.









