எம்.எச்.எம். நாளிர் ஆசிரியர் வபாத்தானார்.
إنا لله وإنا إليه راجعون
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி, அறிவியல், எழுத்து மற்றும் சமூகப் பணிகளில் அளப்பரிய பங்களிப்பை ஆற்றிய எம்.எச்.எம். நாளிர் ஆசிரியர் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்த செய்தி எமது சமூகத்திற்கு பேரிழப்பாகும்.
1943 நவம்பர் 03 அன்று மாத்தறை, வெலிகமையில் பிறந்த நாளிர் ஆசிரியர், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கல்விப் பணிக்காக அர்ப்பணித்த ஒரு சிறந்த கல்வியாளரும், ஆசிரியரும், எழுத்தாளரும், வளவாளரும் ஆவார்.
இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய நாகரிகக் கல்வியின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தேசிய கல்வி நிறுவகத்தில் பணியாற்றிய காலத்தில் இஸ்லாம் பாடத்திட்ட வடிவமைப்பு, பாடநூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நூல்கள், கணிப்பீடு மற்றும் மதிப்பீட்டு முறைகள் ஆகியவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றினார். அஹதிய்யா பாடத்திட்டத்தின் வளர்ச்சியிலும் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய நாகரிக ஆசிரியர்களுக்கான ஆசிரியர் வலுவூட்டல் கருத்தரங்குகளை நடாத்தி, கல்வித்துறையில் பல தலைமுறை ஆசிரியர்களை வலுப்படுத்தினார்.
பல்கலைக்கழகக் கல்வி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்குடன், பின்தங்கிய மாணவர்களுக்காக வெளிவாரி வகுப்புகளை நடாத்தி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டதாரிகளாக உருவாக வழிகாட்டியதும் அவரது மறக்க முடியாத சேவையாகும்.
அத்துடன் பல்வேறு கல்வி நிறுவனங்களில் வளவாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அறிவையும் கல்வியையும் சமூக சேவையையும் தனது வாழ்வின் நோக்கமாகக் கொண்டு, பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த நாளிர் ஆசிரியர் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
மர்ஹூம் நாளிர் சேர் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், மாணவர்கள், சக ஆசிரியர்கள் மற்றும் அவரை நேசித்த அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அல்லாஹு தஆலா அன்னாரின் பாவங்களை மன்னித்து, அவருடைய நற்கருமங்களையும் கல்விச் சேவைகளையும் ஏற்றுக் கொண்டு, கப்ரை ஒளிமயமாக்கி, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக.
آمين يا رب العالمين
—ஸலாமா சொஸைட்டி





