ஸலாமா வாராந்த நினைவூட்டல் 29

October 30, 2026
2 Views

இஸ்லாத்தின் மையக் கருத்துக்கள்

அல்-குர்ஆன் மனிதகுலம் அடைய வேண்டிய முழுமையின் உயரங்களை எடுத்துக்காட்டும் வேதமாகும். முஹம்மத் (ஸல்) அவர்கள் அந்த முழுமையை தமது வாழ்விலும் செயல்களிலும் நடைமுறைப்படுத்திய சிறந்த, உயர்ந்த மனிதர் ஆவார்கள்.
இஸ்லாமிய அகீதா என்பது வெறும் கோட்பாடுகளின் தொகுப்பு அல்ல. அது தூய உள்ளம், சுதந்திரமான சிந்தனை, மனிதக் கண்ணியம், இறைவனுக்கு மட்டுமே அடிமைத்தனம் மற்றும் உலகளாவிய மனிதநேயம் ஆகியவற்றை உருவாக்கும் வாழ்வியல் நெறியாகும்.

மனச்சாட்சி மற்றும் உளத்தூய்மை:
இஸ்லாம் வெறும் வெளிப்புற வணக்கச் சடங்குகளை மட்டும் வலியுறுத்துவதில்லை. உண்மையான இறையச்சம் தூய உள்ளத்தில் நிலைபெற வேண்டும். தூய உள்ளங்களில் இருந்தே உண்மையான வணக்கங்களும் பிறக்கின்றன.

அறிவின் முக்கியத்துவம்:
இஸ்லாம் சிந்தனை, அறிவு மற்றும் உண்மையை ஆராய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் அடிப்படையில் முஸ்லிம்கள் பல்வேறு அறிவியல், கலை மற்றும் பண்பாடுகளை உள்ளடக்கிய நாகரிகத்தை உருவாக்கினர். பூமியில் பரந்து செல்லுமாறு அல்குர்ஆன் தூண்டுகின்றது.

மனிதனின் சுதந்திரமும் கண்ணியமும்:
மனிதன் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமையாக இருக்க வேண்டும். இதன் மூலம் ஆட்சியாளர்கள் அல்லது மத அதிகாரிகள் போன்ற மனிதர்களின் அநியாயமான ஆதிக்கத்திலிருந்து அவன் விடுதலை பெறுகிறான். அவனது வாழ்வில் கண்ணியத்தைக் கண்டு கொள்வான்.

இஸ்லாத்தின் உலகளாவிய தன்மை:
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அரபியராக இருந்தாலும், அவர்கள் கொண்டு வந்த இஸ்லாம் எந்த ஒரு இனத்திற்கோ நாட்டிற்கோ மட்டும் உரியதல்ல. அது மனித அறிவையும் சிந்தனையையும் உலகளாவிய ரீதியில் அழைக்கும் மார்க்கமாகும்.

 

ஸதகா

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவனுடைய நற்செயல்கள் அனைத்தும் நின்றுவிடும். மூன்றைத் தவிர: தொடர்ந்து பயனளிக்கும் தர்மம், பயனளிக்கும் கல்வி, மற்றும் அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை ஆகியவை.”

Leave A Comment