ஸலாமா வாராந்த நினைவூட்டல் 16

July 31, 2026
6 Views

ஸதகாவின் சிறப்பு

“ஒரு மனிதர் பூமியின் ஒரு வெறிச்சோடிய பகுதியில் இருந்தபோது, ஒரு மேகத்திலிருந்து குரல் ஒன்று கேட்டது: ‘இன்னாரின் (ஒருவரது பெயரைக் குறிப்பிட்டு) தோட்டத்திற்கு நீர் பாய்ச்சு!’ என்று. உடனே அந்த மேகம் வேறு திசைக்குச் சென்று, கற்கள் நிறைந்த ஒரு நிலப்பகுதியில் தனது முழு மழை நீரையும் பொழிந்தது. அந்த நீர் ஒரு சிறிய நீர்வழியில் முழுமையாக ஓடி ஒரு தோட்டத்தை அடைந்தது. அந்த மனிதர் அந்த நீரைப் பின்தொடர்ந்து சென்றார். அப்போது, ஒரு மனிதர் அந்த நீரை தனது தோட்டத்துப் பயிர்களுக்குத் திருப்பிக் கொண்டிருந்தார். அவர் அவரிடம்: ‘அல்லாஹ்வின் அடியாரே! உங்கள் பெயர் என்ன?’ என்று கேட்டார்.
அவர், மேகத்தில் கேட்ட அதே பெயரைக் கூறினார். பின்னர் அவர் கேட்டார்: ‘அல்லாஹ்வின் அடியாரே! ஏன் என் பெயரைக் கேட்டீர்கள்?’.

அதற்கு அவர் கூறினார்: ‘இந்த நீரைப் பொழிந்த மேகத்திலிருந்து ஒரு குரல், “இன்னாரின் (உங்கள் பெயரைக் குறிப்பிட்டு) தோட்டத்திற்கு நீர் பாய்ச்சு!” என்று கூறுவதை நான் கேட்டேன். இதற்கு காரணம் தான் என்ன?’ என வினவினார். அதற்கு அவர் கூறினார்: ‘நீங்கள் இதைக் கூறியதால் சொல்கிறேன். இந்தத் தோட்டத்திலிருந்து கிடைக்கும் விளைச்சலை மூன்றாக பிரித்து, அதில் மூன்றில் ஒரு பங்கை தர்மமாக வழங்குகிறேன். மற்றொரு மூன்றில் ஒரு பங்கை நானும் என் குடும்பத்தினரும் உண்கிறோம். மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கை மீண்டும் இந்தத் தோட்டத்திலேயே செலவிட்டு, அதன் சாகுபடி மற்றும் பராமரிப்பிற்குப் பயன்படுத்துகிறேன்.’ ” (முஸ்லிம்)

நல்ல வாழ்க்கை (الحياة الطيبة) என்றால் என்ன?

இமாம் இப்னு அகீல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “நல்ல வாழ்க்கை என்பது, தன் எல்லா காரியங்களையும் அல்லாஹ்விடம் முழுமையாக ஒப்படைப்பதாகும். வளர்க்கப்படும் ஒரு சிறு குழந்தை தனது பெற்றோரிடம் தனது காரியங்களை முழுமையாக ஒப்படைத்து, அவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்து, தனக்குத் தானே தேர்வு செய்ய வேண்டிய சுமையின்றி மனநிம்மதியுடன் இருப்பதைப் போன்றதாகும். அதுபோல, தனது காரியங்களை அல்லாஹ்விடம் ஒப்படைத்தவன், தனக்காகத் தேர்ந்தெடுப்பவனாகிய அல்லாஹ் இருக்கும்போது, தனக்காக வேறு தேர்வு செய்ய முயலமாட்டான்.”

மனிதனுக்கு தொழுகை எவ்வாறு உதவியாக அமைகிறது?

தொழுகை, அது முழுமையான முறையில் நிறைவேற்றப்படும் போதுதான் மனிதனுக்கு உண்மையான துணையாக அமையும். அதாவது, இதயம் முழுமையாக அல்லாஹ்வை நோக்கி ஒருமுகப்படுத்தப்பட்டு (குஷூஉடன்), தொழுகையில் அனைத்துக் கடமைகளும் முறையாக நிறைவேற்றப்படும் தொழுகையாக இருக்க வேண்டும். ஆனால், இன்றைய பெரும்பாலான மக்களின் தொழுகை உடல் உறுப்புகளின் தொழுகையாகவே உள்ளது. இதயத்தின் தொழுகையாக இல்லை. அதனால்தான் ஒருவர் ‘அல்லாஹு அக்பர்’ என்று தொழுகையை ஆரம்பித்த உடனேயே, எந்தப் பயனும் இல்லாத எண்ணற்ற சிந்தனைகளும் மனக்குழப்பங்களும் அவரைச் சூழ்ந்து கொள்கின்றன. தொழுகை முடிந்து ஸலாம் கூறியவுடன் அவை அனைத்தும் மறைந்து விடுகின்றன. ஆனால், உண்மையான தொழுகை என்பது, “நான் அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்கிறேன்” என்ற உணர்வோடு நிறைவேற்றப்படும் தொழுகையாகும். அது, எல்லா வகையான வணக்கங்களின் இனிமையும் பலன்களும் நிறைந்த ஒரு பூஞ்சோலையாகும். அத்தகைய தொழுகை மனிதனின் எல்லா கவலைகளையும் துயரங்களையும் மறக்கச் செய்யும். ஏனெனில், அந்த நேரத்தில் அவன் தனது மிகவும் நேசத்திற்குரியவனான அல்லாஹ்வுடன் தொடர்பை ஏற்படுத்துகிறான். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எனது கண்களின் குளிர்ச்சி தொழுகையில் அமைக்கப்பட்டுள்ளது.’ (நஸாயீ)

 

ஸதகா

நபி ﷺ கூறினார்கள்: “ஒருவர் நேர்மையான வழியில் சம்பாதித்ததில் இருந்து ஒரு பேரீச்சம் அளவு தர்மம் செய்தால், அல்லாஹ் அதைத் தனது வலக் கரத்தால் ஏற்று, அதன் உரிமையாளருக்காக, அதை மலையளவு போல் ஆகிவிடும் வரை வளர்த்தெடுக்கிறான்.”

Leave A Comment