ஸலாமா வாராந்த நினைவூட்டல் 10

June 18, 2026
8 Views

மலக்குமார்கள் செவிமடுக்க வந்த ஸஹாபியின் குரல்

அவர் உஸைத் பின் ஹுதைர் (ரழி). ஓர் இரவில், அவர் சூரத்துல் பகராவை ஓதிக்கொண்டிருந்தார். அவரது குதிரை அருகில் கட்டப்பட்டிருந்தது. ஓத ஆரம்பித்ததும் குதிரை திடீரென்று பதறியது. ஓதுதலை நிறுத்தியதும் அமைதியானது. மீண்டும் ஓதத் தொடங்கியதும் மீண்டும் பதறியது. இவ்வாறு நிகழ்ந்து கொண்டே இருந்தது.
அப்போது அவரது மகன் யஹ்யா குதிரைக்கு அருகில் நின்றிருந்தான். குதிரை அவனை மிதித்துவிடுமோ என்ற அச்சத்தில் உஸைத் (ரழி) ஓதுதலை நிறுத்தி மகனை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.
மறுநாள் காலை அவர் நபி ﷺ அவர்களிடம் சென்று நடந்ததை விவரித்தார். நபி ﷺ புன்முறுவலுடன் சொன்னார்கள்: “ஓதுங்கள் இப்னு ஹுதைரே! ஓதுங்கள் இப்னு ஹுதைரே!”. உஸைத் கூறினார்: “அல்லாஹ்வின் தூதரே! என் மகன் யஹ்யா குதிரையருகில் இருந்தான். குதிரை அவனை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். அதனால் ஓதுதலை நிறுத்தி அவனிடம் சென்றேன். அப்போது வானை நோக்கினேன். அங்கே விளக்குகளைப் போன்ற ஒளிப்புள்ளிகளைக் கொண்ட ஒரு மேகக்கூட்டம் போன்ற காட்சி தென்பட்டது. அதைக் கண்டு அஞ்சி அங்கிருந்து விலகினேன்.”
நபி ﷺ கேட்டார்கள்: “அது என்னவென்று உனக்குத் தெரியுமா?”. “இல்லை, அல்லாஹ்வின் தூதரே” என்றார் உஸைத்.
அதற்கு நபி ﷺ கூறினார்கள்: “அவர்கள் வானவர்கள். உன்னுடைய குர்ஆன் திலாவத்தை கேட்க உனக்கு அருகில் இறங்கி வந்தார்கள். நீ விடியும் வரை ஓதிக்கொண்டே இருந்திருந்தால், அவர்கள் அப்படியே நிலைத்திருந்திருப்பார்கள். காலையில் மக்கள் அனைவரும் அதைக் கண்டு கொண்டிருப்பார்கள். அது மறைந்தும் போயிருக்காது.”
-(ஸஹீஹ் அல்-புகாரி 5018).

அல்லாஹ் எமக்கு நலவையே நாடுகிறான்

அல்லாஹ் உங்களுக்கு நன்மையை நாடினால், ஆயிரம் தடைகள் இருந்தாலும் அதை உங்களிடம் கொண்டு சேர்த்துவிடுவான். அப்போது அவனது அருள் ஒருபோதும் தடுக்கப்படாது என்பதையும், உங்களுக்காக விதிக்கப்பட்டது தாமதமானாலும் நிச்சயமாக உங்களை வந்தடையும் என்பதையும் நீங்கள் உணர்வீர்கள்.
அல்லாஹ் உங்களுக்காக நாடியதை எவராலும் தடுக்க முடியாது. மேலும் உங்களிடமிருந்து அவன் விலக்கி வைத்தது கூட மறைந்திருக்கும் ஒரு அருளும் கருணையும் ஆகும்.
எனவே, திருப்தியுடனும் மன நிம்மதியுடனும் இருங்கள். ஏனெனில், உங்களுக்கு நிகழும் ஒவ்வொரு விடயத்திலும், கண்களால் காண முடியாத ஒரு நன்மையை அல்லாஹ் தனது பேரறிவும் ஞானமும் கொண்டு ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான்.

 

அதிகாலை சுமந்து வரும் நற்செய்தி

அதிகாலையின் அமைதியில், முதல் ஒளிக்கதிர்கள் கண்களை விழிப்பதற்கு முன், நன்மைக்கான வாய்ப்புகள், அருளின் தென்றல்கள், அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடுவோருக்காகத் திறக்கப்பட்ட கதவுகள் ஆகியவற்றைத் தன்னகத்தே சுமந்து ஒரு புதிய நாள் தொடங்குகிறது.
காலை என்பது நாம் வாழ்ந்து கடக்கும் ஒரு நேரம் மட்டுமல்ல. அது தினமும் புதுப்பிக்கப்படும் ஒரு இறை அருட்கொடையாகும். அதன் மூலம் நமக்கு சொல்லப்படுவது:
‘உன் வாழ்நாளில் இன்னும் சிறிது காலம் மீதமுள்ளது. அதனைப் பயனுள்ளதாக்கிக் கொள்.’
அல்லாஹ் கூறுகின்றான்:
“நினைவு கூர விரும்புவோருக்கும், நன்றி செலுத்த விரும்புவோருக்கும் இரவையும் பகலையும் ஒன்றன் பின் ஒன்றாக வருமாறு ஏற்படுத்தியவன் அவனே.” (அல்குர்ஆன் 25:62).
எனவே, காலை என்பது நினைவு கூர்வதற்கும், நன்றியுணர்வை வெளிப்படுத்துவதற்கும், நாட்கள் எவ்வளவு சுமைகளைத் தந்திருந்தாலும் புதிதாக ஆரம்பிப்பதற்குமான ஒரு அரிய வாய்ப்பாகும்.

 

சதகா

சதகாக்கள் அல்லாஹ்வின் அன்பு, திருப்தி, நரக விடுதலை, நோய் நிவாரணம், செல்வத்தில் பரகத் மற்றும் பல நன்மைகளைப் பெற்றுத்தர போதுமானதாகும்.

 

Leave A Comment