இஸ்லாமிய புத்தாண்டு: சிந்தனைக்கும் மாற்றத்திற்குமான ஒரு பயணம்

June 24, 2026
21 Views

முஹர்ரம் வழிகாட்டல்கள் என்ற தொடர் உரை நிகழ்ச்சியின் 1வது நிகழ்ச்சியாக ‘முஹர்ரம் : இஸ்லாமிய ஆண்டின் தொடக்கமும் அதன் சிறப்புக்களும்’ என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் நாளிம் (ஸஹ்ரி) அவர்கள் 08-06-2026 தினத்தில் நிகழ்த்திய உரையின் சுருக்கம்…

 

இஸ்லாமிய புத்தாண்டு: சிந்தனைக்கும் மாற்றத்திற்குமான ஒரு பயணம்

ஒரு முஸ்லிமின் வாழ்வு, நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் தன்னைப் புதுப்பித்து, தனது இறுதிப் பயணத்தின் வெற்றிப் பாதையைச் சிந்திப்பதற்குக் கடமைப்பட்டிருக்கிறது. இவ்வுலகம் வேகமாகப் போய்க்கொண்டிருக்க, மறுமை நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவற்றுக்கு மத்தியில் தான் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நாமும் மறுமைக்குரியவர்களாக, சுவர்க்கத்தை இலக்காகக் கொண்டு வாழ வேண்டிய தேவை இருக்கிறது. இச்சிந்தனை நமக்கு வேகமாக வர வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு நாள் காலையும் சமூக வலைத்தளங்களைத் திறந்தால், அங்கு அதிகமாகப் பகிரப்படுபவை மரணச் செய்திகளே. இளம் வயதில், கற்கும் வயதில், திருமணம் முடித்து, தொழில் ஆரம்பித்த புதிதில், சந்தோஷமாக இருந்தவர்களின் மரணச் செய்திகள் நம்மை வந்தடைகின்றன.

இச்செய்திகள் நமக்குப் படித்துக் கொடுக்கும் பாடம்: “இன்று அவருக்கு, நாளை எனக்கோ தெரியாது” என்கின்ற உணர்வும், “இன்று காலையில் இருந்தவர் இரவில் ஜனாஸாவாக அடக்கப்படுகிறார்” என்றால், “நானும் அவ்வாறு அடக்கப்படுவேனோ?” என்கின்ற அச்சமும் உணர்வும் நமக்கு வரவேண்டும். இந்தச் சிந்தனையோடுதான் புத்தாண்டு குறித்த கருத்துக்களுக்குச் செல்வது பொருத்தமானதாகும்.

இஸ்லாத்தின் காலக் கணக்கீடு

அல்லாஹ் குர்ஆனில் (9:36) மிக முக்கியமான ஒரு செய்தியைச் சொல்கிறான்: அல்லாஹ்விடத்தில் 12 மாதங்கள் கணக்கிடப்பட்டிருக்கின்றன. இவை இன்று நேற்று உருவாக்கப்பட்டவை அல்ல; வானமும் பூமியும் படைக்கப்பட்ட நாளிலிருந்தே இந்த 12 மாதங்கள் ஒரு வருடமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதங்களில் நான்கு மாதங்களை அல்லாஹ் கண்ணியமானதாகவும், உயர்வானதாகவும் ஆக்கியிருக்கிறான். இந்த வசனத்தின் இறுதியில் அல்லாஹ் கூறுகிறான்: “நீங்கள் உங்களுக்கு அநியாயம் இழைத்துக் கொள்ளாதீர்கள்.”

ஒரு முஸ்லிமின் வாழ்க்கை அவன் பிறப்பதற்கு முன்னரே, அவன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ரூஹ் ஊதப்படும் போதே, அவனுடைய வாழ்நாளின் அளவு எழுதப்பட்டு விடுகிறது. எனவே, வருட மாற்றம் என்பது நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைச் சொல்கிறது: வருடங்கள் மாறுவதால் நமக்கு வயது கூடுவதில்லை, மாறாக நமது வாழ்நாள் குறைந்து கொண்டே போகிறது. 40 வருடங்கள் வாழ்வதாக நிர்ணயிக்கப்பட்ட ஒருவர், ஒரு வருடம் கழிந்ததும் 39 ஆக மாறுகிறார். இதுவே புத்தாண்டின் உண்மையான கண்ணோட்டம்.

ஹிஜ்ரியும் முஹர்ரமும்: புத்தாண்டின் பின்னணி

முஹர்ரம் மாதம் எமது முதல் மாதமாகும். இந்த புத்தாண்டு முறை எவ்வாறு உருவானது? ஹஜ்ரத் உமர் (ரலி) ஆட்சி செய்த போது, கடிதங்களில் திகதி இல்லாததால் ஏற்பட்ட குழப்பத்திற்குத் தீர்வாக, ஒரு காலக் கணக்கீட்டு முறை தேவைப்பட்டது. அப்போது ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள், ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் இணை வைப்பிலிருந்து விடுபட்டு, தியாகத்துடன் பயணித்த ஹிஜ்ரத்தின் நாளை வைத்து வருடத்தை ஆரம்பிப்போம் என்று பரிந்துரைக்க, உமர் (ரலி) அதனை ஏற்றுக் கொண்டார்கள். இதுதான் இஸ்லாமிய புத்தாண்டின் ஆரம்பம். ஹிஜ்ரத் நிகழ்வு முஹர்ரமில் நடக்கவில்லை என்றாலும், அதன் அடித்தளம் முஹர்ரமில்தான் போடப்பட்டது. மேலும், முஹர்ரம் அல்லாஹ்வால் கண்ணியப்படுத்தப்பட்ட மாதமாகும். அதனால், இந்தப் புனித மாதத்திலிருந்தே புத்தாண்டை ஆரம்பிக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து.

புத்தாண்டை ஒரு முஸ்லிம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?

நாம் பழகியிருப்பது, நள்ளிரவு 12 மணிக்கு வெடி வெடித்து, வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளும் புத்தாண்டைத்தான். ஆனால் இஸ்லாம் நமக்குச் சொல்கிறது: “மனிதா, புது வருடம் வருகிறது. உன் வாழ்க்கையில் ஒரு வருடம் போய்விட்டது. உனக்குத் தரப்பட்ட ஆயுள் குறைந்திருக்கிறது.” கடந்த முஹர்ரமில் நம்முடன் இருந்த எத்தனையோ பேர் இன்று மண்ணறையில் இருக்கிறார்கள். இந்தப் புத்தாண்டு நமக்கு இறப்பின் நினைவூட்டலாக இருக்க வேண்டும். அடுத்த புத்தாண்டுக்கு நாம் இருப்போமோ என்னவோ? இச்சிந்தனை வந்தால், புத்தாண்டை நாம் எதிர்கொள்ளும் விதமே மாறும்.

குர்ஆன் கூறுகிறது: “மறுமைக்காக ஏதாவது சேமித்து வையுங்கள்.” இவ்வுலகம் மறுமைக்கான விளைநிலம். கியாமத் நாளில், இங்கு கழித்த ஒவ்வொரு நிமிடத்துக்கும் நாம் கணக்கு கொடுக்க வேண்டும். நம் பேச்சுகள், செயல்கள் அனைத்தும் அன்று காட்டப்படும். நம் நாக்குக்குப் பூட்டு போடப்பட்டு, நம் உறுப்புகளே பேசும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கியாமத் நாளில், பூமி ஒவ்வொரு மனிதனையும் அவனது பெயரைச் சொல்லி அழைத்து, அவன் செய்த நன்மை தீமைகளைச் சாட்சி சொல்லும்.

 

புத்தாண்டில் மூன்று முக்கியத் திட்டங்கள்

முதலாவது: சென்ற வருடத்திற்கான தவ்பா

கழிந்த வாழ்க்கையைப் பற்றி அல்லாஹ்விடம் மட்டும் பேசுங்கள். “யா அல்லாஹ்! நீ எனக்குத் தந்த ஆயுளில் எத்தனை நாட்களை உனது திருப்தியோடு கழித்தேன்? என் செயல்களில் எத்தனை உன்னைத் திருப்திப்படுத்தும் விதத்தில் இருந்தது? நான் செய்த தவறுகளுக்காக வருந்துகிறேன். என்னை மன்னிப்பாயாக!” எனப் பிரார்த்தியுங்கள்.

வியாபாரிகள் புத்தாண்டில் ஸ்டாக் எடுப்பது போல, நாமும் நமது இபாதத்தின் ஸ்டாக் எடுக்க வேண்டும். கடந்த வருடத்தில் எத்தனை தொழுகைகளை வீணடித்தோம்? எத்தனை ஜமாஅத்தைத் தவறவிட்டோம்? ரமலான் எப்படிக் கழிந்தது? துல்ஹிஜ்ஜா எப்படிக் கழிந்தது? இவற்றைக் கணக்கிட்டு, மன்னிப்புக் கோர வேண்டும்.

இரண்டாவது: புத்தாண்டிற்கான இபாதத்துத் திட்டம்

இன்ஷா அல்லாஹ், இந்த முஹர்ரம் முதல் அடுத்த முஹர்ரம் வரை, ஐவேளைத் தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழ வேண்டும். முன் பின் சுன்னத்துகளைப் பேண வேண்டும். காலை, மாலை திக்ருகள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆக்களைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு திட்டமிட்ட மனிதருக்கே அல்லாஹ் கூலி கொடுப்பான். நாம் இறக்கும் போதும் நமது நல்லமல்களைச் செய்தவர்களாக அல்லாஹ் நம் ஆன்மாவை எடுக்க வேண்டும்.

மூன்றாவது: குடும்ப உறவுகளை வலுப்படுத்துதல்

கடந்த வருடத்தில் நம் இரத்த உறவுகளை எத்தனை முறை சந்தித்தோம்? தாய், தந்தை, சகோதரர்களைப் பார்க்கத் திட்டமிடுங்கள். ஒரு தாய், தன் பிள்ளையை ஒரு முறையாவது அணைத்து முத்தமிட ஏங்குகிறாள். உறவுகள் மரணித்த பின்னர் கண்ணீர் வடிப்பதை விட, அவர்கள் உயிரோடு இருக்கும் போதே அவர்களைச் சந்தித்து, அவர்களின் மனம் நோகாமல் பார்த்துக் கொள்வதே சிறந்தது.

பொருளாதார விஷயத்தில் எச்சரிக்கை

ஹலாலான வழியில் சம்பாதிப்பதில் திட்டமிடுங்கள். ஹராமான பணத்தைக் கொண்டு கோடிகள் தர்மம் செய்தாலும், அது ஒருபோதும் ஹலாலாக மாறாது. ஹலாலாகச் சம்பாதித்த ஒரு ரூபாய்க்கு அதிக மதிப்பு உண்டு. உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் கொடுக்கும் உணவு ஹலாலாக இருக்க வேண்டும்.

புத்தாண்டுப் பிரார்த்தனை

இறுதியாக, அல்லாஹ் துல்ஹிஜ்ஜா மாதம் சுமந்து வந்த பாக்கியங்களை நமக்கும் வழங்க வேண்டும். ஹஜ்ரத் இப்ராஹீம், ஹஜ்ரத் இஸ்மாயில், அன்னை ஹாஜர் (அலைஹிமுஸ்ஸலாம்) அவர்களின் தியாகம் நம் முன் நிழலாடுகிறது. பாலைவனத்தில் தனியாக விடப்பட்ட போது, அன்னை ஹாஜர் கூறினார்கள்: “அல்லாஹ் ஒருபோதும் எங்களை வீணாக்க மாட்டான்.” நாமும் அல்லாஹ்வின் பக்கம் திரும்பினால், அவன் நம்மை ஒருபோதும் வீணாக்க மாட்டான். ரப்புல் ஆலமீன், தன் அன்பையும் திருப்தியையும் பெற்ற நல்லவர்களின் கூட்டத்தில் நம் அனைவரையும் சேர்த்தருள்வானாக.

Leave A Comment