– எம். எச். எம். நாளிர் –
பகுதி – 20
முடிவுரை :
மனிதன் பூமியில் அல்லாஹ்வின் பிரதிநிதியாக அமர்த்தப்பட்டுள்ளான். புலனறிவு, பகுத்தறிவு என்பவற்றுக்கு அப்பால் வஹி மூலமான அறிவும் மனிதனுக்குத் தேவைப்படுகின்றது. அல்லாஹ் அதனை நபிமார்கள், ரஸூல்மார்கள் மூலம் கற்பிக்கின்றான். இறுதித் தூதரான றஸூல் (ஸல்) அவர்களும் ஓர் ஆசிரியராக நின்று மக்களுக்கு அதனைக் கற்பித்தார்கள்.
முறையான கல்வியமைப்பொன்று காணப்படாத அந்தக் காலகட்டத்தில் முறைசாரா அல்லது முறையில் கல்வி முறை மூலம் அதனை உரிய முறையில் வழங்கினார்கள். தன்னைச் சூழ்ந்து நின்ற மானாக்கர்களை ஸஹாபா என்ற மிகப் பொருத்தமான சொற்பிரயோகத்தின் மூலம் விளித்து தகுந்த முறையில் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். எல்லா இடங்களிலும் எல்லாச் சூழலிலும் எல்லா மட்டத்தினரும் எல்லா நேரங்களிலும் கற்றுக் கொள்வதற்கான ஓர் ஒழுங்கில் திறந்த பாடசாலை போல அவர்களது கற்றல் கற்பித்தல் முறை இடம்பெற்றது.
அவர்களது கற்றல்-கற்பித்தல் முறை சிறந்த ஆளுமைகளை உருவாக்கியது. உடல், அறிவு, ஆன்மா ஆகிய மூன்றையும் வளர்த்து விட்டது. கற்பதை கடமையாக வலியுறுத்திய அவர்கள் கற்பதற்கு ஊக்கமளித்தார்கள். கற்பதற்கான வழிகாட்டல்களையும் வழங்கினார்கள். நவீன கல்வியியலாளர்கள் அவர்களிடமிருந்து தான் பெற்றுக்கொண்டார்களோ என்று நினைக்குமளவு எல்லாக் கல்வி நடவடிக்கைகளும் பெயர் குறிக்கப்படாது இடம்பெற்று வந்தன.
கற்கின்ற மாணவர்களை சுற்றிச் சுழன்று, ஆசிரியர் மீதான பற்றையும் நம்பிக்கையையும் ஊட்டினார்கள். கூச்சப்படாமல் கற்பதற்கு இடமளித்தார்கள். ஒவ்வொருவரதும் தனியான வேறுபாடுகளுக்கமைய கற்பித்தல் முறையும், கற்றல் பொருளும் வேறுபடுகின்றன.
கற்பதை அவர்கள் இலகுபடுத்தினார்கள். கற்பவர்களை உற்சாகப்படுத்தி விட்டார்கள். சிந்திக்கத் தூண்டினார்கள். சுயமாக தீர்மானமெடுக்கும் ஆற்றலை வளர்த்து விட்டார்கள். அறிவு, விழுமியங்களோடு வளர வேண்டும் என்பதைக் காட்டிக் கொடுத்தார்கள். ஆசிரியரின் பண்புகள் எவ்வாறமைய வேண்டும் என்பதற்கு நமூனாவாக இருந்தார்கள்.
எனவே, பிற்காலத்தில் கற்பித்தல் – கற்றல் தொடர்பான நியமங்களை வகுப்பதற்கு அவரது முன்மாதிரிகள் துணையாக அமைந்தன. மக்ஜாலண்ட் என்பவரின் அறிவியல் சார் கற்பித்தல் டானியல் என்பவரின் தலை சிறந்த ஆசிரியர் என்ற நூல்கள் குறிப்பிடும் அத்தனை பண்புகளும் அவர்களிடம் காணப்பட்டன என்பதை விளங்கிக் கொண்டோம். நபி (ஸல்) அவர்களது கற்றல் – கற்பித்தல் நுணுக்கங்களையொற்றி யூசுப் கர்ழாவி அவர்கள் ஆய்வு செய்து இறைதூதரும் கல்வியும் என்ற நூலில் விளக்கியுள்ளதையும் அவதானித்தோம்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு திறந்த பாடசாலையை நடத்தியமையால் நடைமுறையிலுள்ள முறைசார் கல்வியில் காணப்படும் வகுப்பறை நேரசூசி, திட்டமிடப்பட்ட பாடப்பொருள், அங்கீகரிக்கப்பட்ட கற்றல் துறைகள், மதிப்பீட்டு நியதிகள் போன்றன எவையும் இங்கு காண்பிக்கப்படவில்லை. அல்லாஹ்வின் தூதர் ஆசிரியராகவும், ஸஹாபாப் பெருமக்கள் மாணவர்களாகவும் கொள்ளப்பட்டதால் இங்கு நபி (ஸல்) அவர்களின் பொது வாழ்விலிருந்தே ஆதாரங்கள் எடுக்கப்பட்டன.
எனவே நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்மாதிரியான முதன்மை ஆசிரியர் என்பது தெளிவாகின்றது. அவர்கள் காட்டித் தந்துள்ள வழிமுறைகளை எமது கற்பித்தல் – கற்றல் செயல்முறையில் பின்பற்றுவோமாயின் எம்மையும் சிறந்த ஆளுமையுடைய நல்லாசிரியர்களாக மாற்றிக் கொள்ள முடியும். எமது மாணவர்களையும் சிறப்பாக வழிநடத்த முடியும். கற்றல் – கற்பித்தல் என்ற இபாதத்தை இலகுவாகவும், பயனுள்ளதாகவும் அமைத்துக் கொள்வதற்கு இவற்றை வழிகாட்டல்களாக கொள்வது பொருத்தமாக அமையும்.