நியுஸிலாந்தில் நடைபெற்ற தாக்குதல் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரணானது

September 10, 2021
811 Views

– ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்

மனித சமூகம் தாம் படைக்கப்பட்ட அடிப்படை நோக்கத்தை மறந்து வாழ்கின்றனர். தமது மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு பல்வேறு நாஷகார செயற்பாடுகளை செய்து வருகின்றனர். குறுகிய உலக வாழ்வின் இன்பங்களை அனுபவிப்பதற்காக பலர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் செயற்பாடுகளால் இன்று மனித இனத்திற்கு மாத்திரமல்ல, இயற்கைக்குக் கூட பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

மனித சமூகத்தை இறைவன் ஓர் உயர் நோக்கத்திற்காக படைத்துள்ளான். தான் இப்புவியில் சிறந்தவனாக வாழ்வதுடன் பிற மனிதர்களுக்கும் பயனுள்ளவனாக அவன் வாழ வேண்டும். இதனையும் தாண்டி இயற்கைக்கு அன்பு காட்டக்கூடியவனாகவும் தான் வாழும் இடத்தை வளப்படுத்துபவனாகவும் மனிதன் இருக்க வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.

மனிதன் கண்ணியமானவன்

அல்லாஹ் மனிதர்களைப் படைத்து அவர்களை கண்ணியப்படுத்தினான். உலகில் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்தான். அவன் படைத்த அனைத்துப் படைப்புக்களையும் விட சிரேஷ்டமான படைப்பாக மனிதனை ஆக்கியதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

ஒருவர் மற்றவரை புரிந்து வாழ வேண்டும். மானுட சமூகம் என்ற வகையில் நலவான காரியங்களில் பரஸ்பரம் ஒத்துழைத்து வாழ வேண்டும். பலவீனமானவனை பலமானவன் பலப்படுத்த வேண்டும். வசதியுள்ளவன் ஏழைகளின் துயர் துடைக்க முன்வர வேண்டும். இதுவே இஸ்லாம் மனிதன் சமூகமாக வாழ்கின்றான் என்ற வகையில் எதிர்பார்க்கும் அம்சமாகும். இதுவே அவனது கண்ணியத்திற்கான அடையாளமாகும்.

உயிர்களைக் காப்பது இஸ்லாத்தின் உயர் நோக்கங்களில் ஒன்று

இஸ்லாத்தின் போதனைகள், சட்டங்கள் அனைத்தும் ஐந்து முக்கிய இலக்குகளை அடையும் வகையில் உள்ளன. இவை மனிதர்களுக்கு நலன்களை ஏற்படுத்தவும், தீங்குகளை விட்டும் அவர்களைப் பாதுகாக்கவே காணப்படுவதாக இஸ்லாமிய சட்ட வல்லுனர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர்.

இதனால் ஒரு உயிரைக் காப்பது மனித சமூகத்தைக் காப்பதற்கு ஒப்பானது எனவும், ஒரு உயிரைக் கொலை செய்வது மானுட சமூகத்தையே கொலை செய்வதற்கு சமமானது எனவும் அல்குர்ஆன் கூறுகின்றது.

‘நீங்கள் உங்களை அழித்துக் கொள்ள வேண்டாம். அல்லாஹ் உங்களுடன் இரக்கமுள்ளவனாக இருக்கின்றான்’ (நிஸா: 29). எம்மைப் பாதுகாத்துக் கொள்வதன் கருத்து விரிவானது. எமது உடலை, அறிவை, ஆன்மாவை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். உணர்வுகளை நெறிப்படுத்தி எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

எம்மில் பலர் தமது உடலைப் பாதுகாத்துக் கொள்வதில் அதிகூடிய கவனம் செலுத்துகின்றனர். ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளல், உடற்பயிற்சிகளில் முறையாக ஈடுபட்டு தனது உடலை வளர்த்துக் கொள்கின்றனர்.

பயனுள்ள அறிவைப் பெற்று அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தனக்கு, தனது சமூகம், நாடு, தான் வாழும் இப்பூமி பயன்பெறும் அறிவை பெற்றுக் கொள்ளும் போது இவ்வுலகம் வளம் பெறும். மானுட சமூகம் இவ்வறிவினால் பாரிய வளர்ச்சியைக் காணும். இதில் தவறு விடும் போது ஏற்படும் விளைவுகள் மிகவும் பாரதூரமானவை.
இன்று உலகில் இயங்கி வருகின்ற பல்வேறு தீவிரவாத சிந்தனைகளுக்கு அவர்கள் பெற்ற பிழையான அறிவுப் பிண்ணனியும், பிழையான நோக்கங்களுக்காக அவர்கள் பயன்படுத்தப்படுகின்றமையும் சில காரணங்களாகும். இதனால் பல நாடுகளில் பீதியுடன் வாழும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அநியாயமாக எந்த ஒரு உயிரும் கொலை செய்யப்படக் கூடாது, அனைவரும் பீதியற்று பாதுகாப்பாக வாழ வழிசெய்யப்பட வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இதற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை இருப்பதாக இஸ்லாம் கூறுகின்றது. ஒருவர் தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்வது அவரது நேரடியான பொறுப்பாக இருந்தாலும், அதற்கு சமூகமும் ஒத்துழைப்பாக இருக்க வேண்டும்.

இவ்வகையில் இன்று உலகில் பல இடங்களில் நடைபெற்று வருகின்ற கொலைகள் மனித நேயத்திற்கு, மார்க்கத்தின் போதனைகளுக்கு முற்றிலும் முரணானது. அது இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தினத் தாக்குதலாக இருக்கலாம். நியுஸிலாந்து கிரிஸ்ட்ஷேர்ச் பள்ளிவாசலில் நடைபெற்ற தாக்குதலாக இருக்கலாம், அல்லது கடந்த வாரம் நியுஸிலாந்து ஒக்லன்ட் நகரில் நடைபெற்ற தாக்குதலாக இருக்கலாம். இவை அனைத்தும் மாசடைந்த உள்ளங்களைக் கொண்டவர்களால் செய்யப்படும் தீவிரவாத செயல்களாகும்.

Leave A Comment