தேசத்தின் வளர்ச்சிக்காக ஒன்றாக செயற்படுவோம்.

February 3, 2021
1,098 Views
73வது சுதந்திர தின செய்தி :
ஸலாமா சொஸைட்டி – கொழும்பு.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 73 வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இதனைப் பெற்றுக் கொள்வதற்காக இன, மத வேறுபாடின்றி உழைத்த எமது அனைத்து முன்னோர்களும் நன்றியுடன் நினைவுகூறப்பட வேண்டியவர்கள். அவர்களது அயராத உழைப்பினால் எமது தேசம் அந்திய ஆதிக்கத்திலிருந்து விடுதலையாகியது. எம்மால் எமது நாட்டை ஆளக்கூடிய சுதந்திரம் இதன் மூலம் எமக்குக் கிடைத்தது.
இன்று நாம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றோம். கொரோனா வைரஸின் பரவல் இச்சவால்களை இன்னும் கனதியாக்கியுள்ளது. வளங்கள் நிறைந்த இத்தேசத்தைக் கட்டியெழுப்புவது ஒரு தரப்பின் பொறுப்பு மாத்திரமல்ல. நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் அனைவருக்கும் இதில் பொறுப்புள்ளது. அவரவர் தகுதிக்கு ஏற்ப தமது பணியை ஒவ்வொருவரும் நிறைவேற்றும் போது நாடு வளம்பெறும்.
எமது நாடு பல இன மக்கள் வாழும் அழகிய தேசமாகும். உலக மக்களில் அதிகமானவர்கள் பின்பற்றும் நான்கு மதங்களைச் சேர்ந்தோர் இங்கு வாழ்வது ஒரு விஷேட அம்சமாகும். இந்த வேறுபாடுகளுடன் தான் எமது முன்னோர்கள் சுதந்திரமான ஒரே தேசம் என்ற இலக்கிற்காக குரல் கொடுத்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.
ஆனால் இவ்வேற்றுமைகள் இன்று முரண்பாடுகளாக மாறிவிட்டன. இது ஒருபோதும் நாட்டுக்கு நன்மையைக் கொண்டு வர மாட்டாது. எப்போது நாம் அனைவரும் இந்த நாட்டுப் பிரஜைகள் என்ற உண்மையான உணர்வுடன் கைகோர்த்து தேசத்தின் ஒருமைப்பாட்டுக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் செயற்படுகின்றோமோ அப்போது தான் எமது நாடு வளமடையும். மக்கள் சுபீட்சமடைவார்கள்.

Leave A Comment